"ஓமந்தூரார் மருத்துவமனை மாதிரியே ஆயிடும்!" – முதல்வர் விஜய்யின் பட்டினப்பாக்கம் பிளானுக்கு ஜெயக்குமார் கொடுத்த செக்!

 
1

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த டி. ஜெயக்குமார் பேசுகையில், பட்டினப்பாக்கம் பகுதியில் கள நிலவரம், அப்பகுதியின் போக்குவரத்து நெரிசல் மற்றும் மீனவ மக்களின் வாழ்வாதாரம் உள்ளிட்ட எதார்த்தமான சிக்கல்களை முதலமைச்சர் விஜய் முறையாக யோசிக்கவில்லை எனக் குற்றம்சாட்டினார்.

மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யும் திட்டங்களை நிறைவேற்ற பணம் இல்லை என்று தவெக அரசு தொடர்ந்து கூறி வருகிறது. ஆனால் மறுபக்கம் ரூ.1,200 கோடியில் புதிய தலைமைச்செயலகம் கட்டப்படும் என்று அறிவிக்கிறது. பணமே இல்லை கஜானா காலி என்று கூறிய நிலையில், இவ்வளவு கோடி செலவில் புதிய தலைமைச்செயலகம் அமைப்பது அவசியமா என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

மேலும், பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் அமைக்கப்பட்டால் பாதுகாப்பு மற்றும் நிர்வாகக் காரணங்களுக்காக அப்பகுதி மக்களுக்குப் பல்வேறு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட அதிக வாய்ப்புகள் உள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவால் மீனவர்களும் பொதுமக்களும் கொதித்துப் போய் உள்ளனர். எனவே தவெக அரசு ஆரம்ப நிலையிலேயே இந்த முடிவை கைவிடுவதே நல்லது. புதிய தலைமைச்செயலகம் அமையும் இடம் எங்களுடையது எனக் கூறி பூர்வகுடி மீனவர்கள் போராடி வருகின்றனர். பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் அமைந்தால், சுற்றியுள்ள சுமார் 9 கிராமங்களைச் சேர்ந்த மீனவ மக்களின் வாழ்வாதாரம் நசுக்கப்படும். அதே போல ஏற்கனவே சாந்தோம் சாலைப் பகுதி மிக நெருக்கடியானது. அங்கு பள்ளிகள், குடியிருப்புகள் உள்ளதால் புதிய தலைமைச் செயலகம் வந்தால் போக்குவரத்து முற்றிலும் முடங்கிவிடும்.

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச்செயலகம் அமைக்கும் முடிவால் பள்ளி மாணவர்கள், மீனவர்கள், பொதுமக்கள் என எண்ணற்ற தரப்பினர் பாதிக்கப்படுவார்கள். உண்மையில் சொன்னால் இது பைத்தியக்காரத்தனமான, முட்டாள்தனமான முடிவு. முதல்வர் என்பவர் இது குறித்தெல்லாம் யோசிக்க வேண்டும் என்று டி.ஜெயக்குமார் கடுமையாக விமர்சித்து உள்ளார்

தொடர்ந்து பேசிய அவர், எளிய மீனவ மக்களின் வாழ்வாதாரத்தை நசுக்கி, நெரிசல்மிக்கப் பகுதியில் தலைமைச் செயலகம் கட்டுவதற்குப் பதிலாக, சென்னைக்கு வெளியே உள்ள துணைகோள் நகரம் (Satellite Town) ஏதேனும் ஒரு பகுதியில் புதிய தலைமைச் செயலகத்தைக் கட்டுவதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளலாம் என்றும் யோசனை தெரிவித்தார். மக்கள் நலனைக் கருத்தில் கொள்ளாமல் திட்டத்தை வலுக்கட்டாயமாகத் திணிக்க முயன்றால் அதிமுக சார்பில் மக்கள் திரள் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.

இந்திய நாடாளுமன்றத்தின் புதிய கட்டடமே ரூ.900 கோடியில் கட்டப்பட்டுள்ள நிலையில், மக்களின் வரிப்பணமான ரூ.1,200 கோடியை வீணடித்து, நகரின் நெரிசல்மிக்க மையப்பகுதியில் புதிய தலைமைச் செயலகத்தை அமைப்பது முட்டாள்தனமான முடிவாகும். அதற்குப் பதிலாக, நகரத்திற்கு வெளியே (Outskirts) சாட்டிலைட் டவுன்ஷிப் அமைத்து அங்கு அனைத்து அரசு அலுவலகங்களையும் ஒருங்கிணைத்து புதிய கட்டடங்களை உருவாக்கலாம்.

மீனவர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் எதிர்ப்பை மீறி அரசு இந்த இடத்தில் தலைமைச் செயலகத்தை அமைத்தால், அது எதிர்காலத்தில் பயன்படாமல் ஓமந்தூரார் வளாகத்தைப் போல பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனையாகவே (Super Speciality Hospital) உருவெடுக்கும்" என்று அவர் தெரிவித்தார்.

தமிழகத்தில் இடைத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தலைமைச் செயலக மாற்றம் மற்றும் பட்டினப்பாக்கம் நில விவகாரம் குறித்து அதிமுகவின் இந்த அதிரடி எச்சரிக்கை மற்றும் அறிக்கை, தமிழக அரசியல் வட்டாரங்களிலும் அரசிற்கு எதிராகவும் புதிய விவாதத்தையும் பரபரப்பையும் கிளப்பியுள்ளது.