கோவையில் கட்டுமான நிறுவன உரிமையாளர்கள் வீடுகளில் ஐடி ரெய்டு

கோவையில் பிரபல கட்டுமான நிறுவன உரிமையாளர்களின் வீடு மற்றும்அலுவலகங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்திவருகின்றனர்.
கோவையில் உள்ள தக்ஷா ப்ராபர்டீஸ் அண்ட் டெவலப்பர்ஸ் நிறுவனத்தின் அலுவலகம், உரிமையாளர்கள் வீட்டில் வருமானவரித்துறையினர் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். இதேபோல் கோவை மருதமலை சாலையில் நவாவூர் பிரிவு பகுதியில் ஸ்ரீ தக்ஷா பிராப்பர்டீ அண்ட் டெவலப்பர்ஸ் என்ற நிறுவனத்தின் தலைமை அலுவலகம், மற்றும் வடவள்ளி குருசாமி நகர், அருள்நகர், பாலாஜிநகர் பகுதியில் உள்ள நிறுவனத்தின் இயக்குனர்கள் மோகன், ராமநாரயணன், மற்றும் அருள் அன்டனி ஆகியோரது வீடுகளில் காலை முதல் சோதனை நடைபெற்று வருகிறது.
தக்ஷா நிறுவனம் கோவை உட்பட தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் வீட்டு மனைகளை வாங்கி அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டி விற்பனை செய்து வருகிறது. வரி ஏய்ப்பு புகார் தொடர்பாக இந்த சோதனை நடைபெற்று வருகிறது. சோதனையை ஒட்டி, மோகன், ராமநாரயணன், மற்றும் அருள் அன்டனி வீட்டில் பாதுகாப்பிற்காக போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர்.