பிரபல நகைக்கடை, அதன் உரிமையாளர் வீட்டில் ஐடி ரெய்டு
ஆற்காட்டில் தேர்தல் பணிகள் மும்மரமாக நடைபெற்று வரும் நிலையில் திடீர் வருமான வரித்துறையினர் சோதனையால் ஆற்காட்டில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு பஜார் பகுதியை சேர்ந்த கியான்சாந்த் அவரது மகன் குஷால் சாந்த் என்பவரின் பிரபல தனியார் நகைக்கடையான குஷல் ஜுவல்லரி செயல்பட்டு வருகின்றது. பல ஆண்டுகளாக இயங்கி வரும் இந்த நகை கடையில் வருமான வரி கணக்கில் பரிவர்த்தனைகளில் குளறுபடிகள் இருப்பதாக கூறப்படுகிறது. . அதன் அடிப்படையில், ஜுவல்லரி மற்றும் அவரது வீடு வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
சென்னை வருமான வரித்துறை உதவி ஆணையர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்ட தேர்தல் கண்காணிப்பு அலுவலர் தேவி ஆகியோரின் தலைமையில் 20க்கும் மேற்பட்ட அதிகாரிகள் 5 கார்களில் வந்து சோதனை நடத்திய பின்பு, வருமான வரி குளறுபடிகள் தொடர்பாக முக்கிய ஆவணங்களை எடுத்துச் சென்றுள்ளனர். மேலும் வருமான வரி கணக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் சமர்ப்பித்து விளக்கமளிக்க அழைப்பாணையை ஒட்டி விட்டு சென்றுள்ளனர். சட்டமன்றத் தேர்தல் பணிகள் ராணிப்பேட்டை மாவட்டத்தில் சுறுசுறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், ஆற்காட்டில் உள்ள பிரபல நகை கடையில் திடீரென வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



