திட்டமிட்டபடி அன்புமணி தலைமையில் நாளை பொதுக்குழு கூட்டம் நடக்கும் எனத் தகவல்
பாமக பொதுக்குழுவுக்கு இடைக்கால உத்தரவு ஏதும் இதுவரை பிறப்பிக்கவில்லை. ஆகவே திட்டமிட்டபடி அன்புமணி தலைமையில் நாளை பொதுக்குழு கூட்டம் நடக்கும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் நாளை பாமக பொதுக்குழு கூட்டத்தை, அன்புமணி நாளை கூட்டியுள்ளார். அன்புமணி ராமதாஸ் அழைப்பு விடுத்துள்ள பொதுக்குழுவுக்கு தடை விதிக்க வேண்டுமென ராமதாஸால் நியமிக்கப்பட்ட மாநில பொதுச்செயலாளர் முரளி சங்கர் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், ராமதாஸ், அன்புமணி இருவரையும்
தன் அறைக்கு வரும்படி அழைப்பு விடுத்தார். தைலாபுரத்தில் இருந்து பாமக நிறுவனர் ராமதாஸ் காணொலி வழியாக பேசினார். அதேபோல் அன்புமணி ராமதாசும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.
இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் எந்த உத்தரவும் அளிக்காததால், நாளை திட்டமிட்டபடி மாமல்லபுரத்தில் அன்புமணி தலைமையில் பொதுக்குழு நடக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. வழக்கு தொடர்பாக இரு தரப்பு வழக்கறிஞர்களிடம் வாதம், பிரதிவாதம் எதுவும் நடைபெறாமல் அன்புமணி, ராமதாஸ் இருவரிடமும் தனியே பேசிய நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், எந்த இடைக்கால உத்தரவும் பிறப்பிக்கவில்லை.


