விவசாயிகள் மீது குண்டர் சட்டம் ஏவி இருப்பது கண்டனத்துக்குரியது - வேல்முருகன் எம்எல்ஏ

 
velmurugan

விவசாயிகள் மீது குண்டர் சட்டம் ஏவி இருப்பது கண்டனத்துக்குரியது என்று எம்எல்ஏ வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான வேல்முருகன் , "திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில்  ஏற்கனவே சிப்காட் தொழிற்பூங்கா செயல்பட்டு வரும் நிலையில், புதிதாக ஒரு அலகை அமைப்பதற்காக மேல்மா, குரும்பூர், காட்டுக்குடிசை, வீரம்பாக்கம் உள்ளிட்ட 11 கிராமங்களில் உள்ள  3,174 ஏக்கர் வேளாண் நிலங்களை கையகப்படுத்துவதற்கு எதிராக, கடந்த 4 மாதங்களுக்கு மேலாக விவசாயிகள் போராடி வருகின்றனர்.

velmurugan

இந்த போராட்டம் அமைதி வழியில் நடந்து வந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் பதியப்பட்ட முதல் தகவல் அறிக்கைக்காக, நவம்பர் 4ஆம் தேதி அதிகாலை வீடுபுகுந்து 20 விவசாயிகளை காவல்துறை கைது செய்திருப்பது அதிர்ச்ச்சி அளிக்கிறது. காவல்துறையின் இத்தகைய போக்கு கடும் கண்டனத்துக்குரியது. 

இந்த நிலையில், போராட்டத்தை ஒருங்கிணைத்து வந்த திருமால், அருள், பச்சையப்பன், தேவன், மாசிலாமணி, சோழன் மற்றும் பாக்கியராஜ் ஆகிய 7 விவசாயிகள் மீது மாவட்ட ஆட்சியரின் பரிந்துரையின் பேரில் குண்டர் சட்டத்தை ஏவி இருப்பது ஜனநாயகத்திற்கு விரோதமானது.

முப்போகம் விளையும் பசுமையான வேளாண் நிலத்தை அழித்துதான் சிப்காட் அமைக்க வேண்டுமா என்று நியாயமான முறையில் கேள்வி எழுப்பி வந்த விவசாயிகளுக்கு தமிழ்நாடு அரசு கொடுக்கும் பரிசு இதுதானா?


ஜனநாயக முறையில் போராடிய விவசாயிகளை கைது செய்ததோடு மட்டுமல்லாமல், அவர்கள் மீது குண்டர் சட்டத்தை ஏவி இருப்பது தமிழ்நாடு அரசின் நற்பெயருக்கு களத்தை ஏற்படுத்துமே தவிர, புகழை பெற்று தராது.

எனவே,  வேளாண் விளை நிலங்களைக் கையகப்படுத்துவதனை விட்டுவிட்டு விவசாயிகளின்  கோரிக்கைக்கு தமிழ்நாடு அரசு செவிசாய்க்க வேண்டும். தமிழ்நாடு மாண்புமிகு முதல்வர் அவர்கள் உடனடியாக தலையிட்டு, தடுப்பு நடவடிக்கைகளை கைவிட்டு, விவசாயிகள் உள்ளிட்டவர்களை விடுதலை செய்ய வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக்கொள்கிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.