கையில் அறுவை சிகிச்சைக்கு சென்ற IT இன்ஜினியர் பலி- மருத்துவமனை முற்றுகை

 
கையில் அறுவை சிகிச்சைக்கு சென்ற IT இன்ஜினியர் பலி- மருத்துவமனை முற்றுகை

பூவிருந்தவல்லியில் பிரபல மருத்துவமனைக்கு  கையில் அறுவை சிகிச்சை செய்ய சென்றவர் திடிரென உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


சென்னை குன்றத்தூர் அருகே சிக்கராயபுரம் பகுதியை சேர்ந்தவர் ராஜேஸ்வரன். இவருக்கு சரளா என்பவரின் திருமணம் ஆகி பதினாறு வயதில் ஒரு பெண் 13 வயதில் ஒரு ஆண் என இரண்டு பிள்ளைகள் உள்ளது இந்த நிலையில் ராஜேஸ்வரனுக்கு வலது கையில் கேல்ஷியம் டெபாசிட் இருந்துள்ளது. இதற்காக கையில் அறுவை சிகிச்சை மூலம் கால்சியம் டெபாசிட்டை நீக்க பூவிருந்தவல்லியில் உள்ள பீ வெல் மருத்துவமனையில் கடந்த 22 ஆம் தேதி அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு 23ஆம் தேதி மதியம் அறுவை சிகிச்சைக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பின்னர் 4 மணி அளவில் ராஜேஸ்வரனின் உறவினர்களை அழைத்து ராஜேஸ்வரனுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளதாகவும் அவருக்கு இதய கோளாறு ஏதேனும் இருந்ததா என்று கேட்டுள்ளனர். சிறிது நேரத்தில் ராஜேஷ்வரன் உயிரிழந்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த ராஜேஸ்வரன் மனைவி சரளா மற்றும் உறவினர்கள் ராஜேஸ்வரன் உடலை கண்டுள்ளனர் அப்போது ராஜேஸ்வரன் கழுத்தில் ஓட்டை போடப்பட்டு இருந்துள்ளது.

இது குறித்து மருத்துவரிடம் கேட்டபோது ராஜேஸ்வரனுக்கு திடீரென இருதய கோளாறு ஏற்பட்டதாகவும் இதற்காக சிகிச்சை அளித்த போதும் அவர் திடீரென உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த ராஜேஸ்வரனின் குடும்பத்தார் மருத்துவமனையில் கதறி அழுத காட்சி காண்பவரை கண்கலங்க வைத்தது.மேலும் மருத்துவமனையின் தவறான சிகிச்சையால் தனது கணவர் உயிரிழந்ததாக குற்றம் சாட்டிய சரளா பூவிழுந்தவல்லி காவல் நிலையத்தில் மருத்துவமனை மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி புகார் அளித்துள்ளார். அதில் கணவர் உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாகவும், அறுவை சிகிச்சை செய்வதற்கு முன்பு ரத்தப் பரிசோதனை இருதய செயல்பாடு போன்ற பல்வேறு முன்னெச்சரிக்கை சோதனைகள் நடத்த வேண்டும் அப்படி எந்த ஒரு அடிப்படை சோதனைகளும் நடத்தாமல் அறுவை சிகிச்சை செய்ய திட்டமிட்டுள்ளனர். அதேபோல் கழுத்தில் ஓட்டை போட்டதற்கும் தங்களிடம் எந்த ஒரு அனுமதியும் பெறாமல் சிகிச்சை அளித்துள்ளனர். எனவே தனது கணவர் உடலை பிரேத பரிசோதனை செய்து இறப்பிற்கான காரணத்தை கண்டறிந்து மருத்துவமனை மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர். இதை அடுத்து ராஜேஸ்வரன் உடலை பிரேத பரிசோதனைக்கு காவல்துறையினர் அனுப்பி வைத்தனர் கையில் அறுவை சிகிச்சைக்காக வந்தவர் மருத்துவமனையில் திடீரென உயிர் இழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து அறுவை சிகிச்சை நடைபெற்ற மருத்துவமனை தரப்பில் கூறுகையில், ராஜேஷ்வரன் குன்றத்தூர் அருகே தனியார் மருத்துவமனையில் கையில் ஏற்பட்ட பிரச்சனை குறித்து வைத்தியம் பார்த்து வந்த நிலையில் அறுவை சிகிச்சை செய்ய இங்கு அழைத்துவரப்பட்டுள்ளார், அறுவை சிகிச்சைக்கு முன்பு சீராக இருந்த அவரின் உடல்நிலை அறுவை சிகிச்சை அறைக்கு அழைத்து சென்றதும் திடீரென இதயத்துடிப்பு குறைந்து செயலிழக்க துவங்கியது. இதற்காக மருத்துவமனை மருத்துவர்கள் சிகிச்சை அளித்த போதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டார். எந்த ஒரு தவறான சிகிச்சையும் மருத்துவமனையில் நடைபெறவில்லை. மாறாக அவரை காப்பாற்றும் பொருட்டு சிகிச்சைகள் அளிக்கப்பட்டன என தனியார் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது