என்னை திமுகவின் 'கட்டப்பன்'னு சொன்னாலும் பரவாயில்லை..! - மேடையில் சத்யராஜ் பேசிய வைரல் பேச்சு..!
சென்னை சைதாப்பேட்டையில் உள்ள கலைஞர் கணினி கல்வியகம், மகளிர் திறன் மேம்பாட்டு மையத்தில் Tally, அழகுக் கலை பயிற்சி முடித்தவர்களுக்கு பட்டம் மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பயிற்சி முடித்த 250 மாணவ, மாணவிகளுக்கு நடிகர் சத்யராஜ் சான்றிதழ்களை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசுகையில், "கலைஞர் கணினி கல்வியகத்தில் 15 பயிற்சி வகுப்புகள் சிறப்பாக முடித்து, 16வது பயிற்சி வகுப்பில் மாணவர்கள் பயிற்சி பெற உள்ளனர். தென்னிந்தியாவிலேயே சிறந்த கணினி கல்வியகம் என, சைதாப்பேட்டையில் உள்ள கலைஞர் கணினி கல்வியகம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
கடந்த வாரம், கலைஞர் கணினி கல்வியகத்தை ஆய்வுசெய்ய சென்றிருந்தேன். புத்தியே இல்லாதவர்கள் சமூக வலைத்தளத்தில் வந்து, நீங்கள்தான் எம்எல்ஏவாக இல்லையே, ஏன் ஆய்வு செய்கிறீர்கள் என கேள்வி எழுப்பி உள்ளனர். இது, அரசு நடத்தும் கல்வியகம் அல்ல. எங்கள் கட்சியை சார்ந்தவர்களின் உழைப்பில் நடத்தும் பயிற்சி மையம் அது. இதனை கடந்த 6 ஆண்டுகளாக நடத்தி வருகிறோம்.
எங்களிடம் இதுவரை, 1,430 மாணவ மாணவிகள் பயிற்சி முடித்திருக்கின்றனர். இதனால், 1,430 குடும்பங்களும் பயன்பெறுகின்றன. அந்த குடும்பங்கள் எந்த கட்சியை சார்ந்தவர்கள் என்று நாங்கள் பார்ப்பதில்லை.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எந்தவித கட்சி பாகுபாடுமின்றி இந்த மையத்தை நடத்துங்கள் என்று கூறினார். அந்த மையத்தை இப்போது மட்டுமல்; எப்போதும் நடத்துவோம். ஆளுங்கட்சியாக இருந்தாலும் சரி, எதிர்க்கட்சியாக இருந்தாலும் சரி. இந்த மையத்திற்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாது. நிச்சயமாக இந்த மையத்தில் சேருபவர்களுக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது
சைதாப்பேட்டையில் 475 பெண்கள் வாகன ஓட்டுநர் உரிமம் பெற்று ஆட்டோ ஓட்டுகிறார்கள். இது வேறு எங்கும் கிடையாது. ஒரு ஆட்டோவுக்கு ரூ.1 லட்சம் மானியம் வழங்கியுள்ளோம். 475 ஆட்டோக்களில், 2 ஆட்டோக்களில் வேறு கட்சிக்கொடி பறப்பதாக கூறினார்கள். ஆனால் அவர்கள் வீட்டில் அடுப்புக்கொடியை ஏற்றி வைத்தது திமுக தான்.
கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மூத்தோருக்கான சிறப்பு மருத்துவமனை, சைதாப்பேட்டையில்தான் இருக்கிறது. மூன்று கிலோ மீட்டர் தூரத்திற்கு சைதாப்பேட்டையில் ஒரு சிறப்பு மேம்பாலம் அமைந்து வருகிறது.
கிண்டி ரேஸ் கோர்ஸில் 118 ஏக்கர் நிலத்தில் சுற்றுச்சூழல் பூங்கா அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அந்தப் பூங்கா திறக்கப்பட்டால் பல்வேறு ஊர்களில் இருந்து வந்து அதனை பார்ப்பார்கள். தேர்தல் தோல்வி என்பது பெரிய விஷயம் அல்ல; மாணவர்களின் முகத்தில் இருக்கின்ற மகிழ்ச்சிதான் தேர்தலுக்கான வெற்றி; மனித வாழ்வியலுக்கான வெற்றி" என்று பேசினார்.
அவரைத் தொடர்ந்து, நடிகர் சத்யராஜ் பேசுகையில், "திமுக தேர்தலில் பங்கேற்க தொடங்கப்பட்ட கட்சி அல்ல, சமூகத் தொண்டு, சமூக சேவை செய்வதற்காக தொடங்கப்பட்ட இயக்கம்தான் திராவிட முன்னேற்றக் கழகம். மக்களுக்கு செய்கின்ற சேவைதான், தொண்டர்களுக்கும் தலைவர்களுக்கும் என்றும் முக்கியமானதாக இருக்கும்,
சமூகத்தில் கீழ் நிலையில் இருப்பவர்களை மேல்நிலைக்கு கொண்டு வருவதுதான் இவர்களின் முக்கியமான நோக்கம். ஆட்சியில் இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, இதுதான் அவர்களின் முக்கிய குறிக்கோள்.
கிண்டி ரேஸ் கோர்ஸில் அமைக்கப்பட்டு வரும் பூங்காவை, திமுக தலைவர் ஸ்டாலின் முதலமைச்சராக வந்து திறக்க வாய்ப்பு இருக்கிறது என நான் நம்புகிறேன். யார் கட்சி தொடங்கினாலும் ஆட்சி நடத்தினாலும் கொள்கைத் தலைவர்களாக பெரியாரையும் அம்பேத்கரையும் சொல்லித்தான் ஆக வேண்டும்.
தமிழகத்தில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி எண்ணற்ற சாதனைகளை செய்துள்ளார். கல்வி, வேலைவாய்ப்பு, வளர்ச்சி திட்டம், நலத்திட்டம் ஆகியவற்றில் முதன்மை மாநிலமாக தமிழ்நாடு உருவானது மு.க.ஸ்டாலின் ஆட்சியில்தான்.
அதனை தற்போது ஆட்சியில் இருப்பவர்கள் தக்கவைத்துக் கொள்ள வேண்டும். நீங்கள் திட்டங்களின் பெயரை வேண்டுமானால் மாற்றிக்கொள்ளுங்கள். ஆனால் திட்டங்களை மாற்றாதீர்கள். ஏனெனில் மக்கள் நலன் முக்கியம். தற்போது ஆட்சியில் இருப்பவர்கள், திமுக வகுத்த பாதையில் செல்வதுதான் நாட்டுக்கு நல்லது.
இந்த இயக்கம் ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் தமிழ்நாட்டின் நலனுக்காக பாடுபட்டு கொண்டிருக்கும். திமுக எதிர்க்கட்சியாக இருக்கும்போதும் நிச்சயம் அதற்கு உறுதுணையாக இருப்பேன், ஆளுங்கட்சியாக இருக்கும்போது அட்டையாக ஒட்டிக் கொள்பவன் நான் அல்ல, திமுகவின் கட்டப்பன் நான் என்று கூட சொல்லி கொள்ளுங்கள்.
எங்களுக்கு சினிமாவில் நான்கு காசு கிடைக்கிறது என்றால், அதற்கு தமிழ்நாடு நன்றாக இருப்பதுதான் காரணம். திமுக இயக்கம், தமிழ்நாட்டிற்கு எப்போதும் காவலனாக இருக்கும்" என்று பேசினார்.

