‘வொர்க் ஃப்ரம் ஹோம்’ கொடுத்து திடீர்னு கம்பெனிய மூடிய ஐடி நிறுவனம்- நடுரோட்டில் கதறும் ஊழியர்கள்

முன்னறிவிப்பின்றி மூடப்பட்ட தனியார் நிறுவனத்தால் பாதிக்கப்பட்ட ஊழியர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை சுங்கம் பகுதியில் செயல்பட்டு வந்த போக்கஸ் எஜுமேட்டிவ் பிரைவேட் லிமிட்டெட் என்ற நிறுவனம், அமெரிக்காவில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு எடுக்கும் பணிகளை செய்து வருகிறது. மேலும் கோவை சுங்கம், ஆர்.எஸ்.புரம் பகுதிகளில் கிளைகள் உள்ள நிலையில் பலர் வீட்டில் இருந்தவாறு பணியாற்றி வந்தனர். சுமார் 3 ஆயிரம் தொழிலாளர்கள் பணியாற்றி வரும் நிலையில் கடந்த ஜன25 ஆம் தேதி இங்கு பணியாற்றும் ஊழியர்களுக்கு மின்னஞ்சல் வந்துள்ளது. அதில் இந்நிறுவன மூடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் முன்னறிவிப்பின்றி நிறுவனம் மூடப்பட்டதை கண்டித்து அந்நிறுவனத்தின் ஊழியர்கள் சுமார் 60க்கும் மேற்பட்டோர், மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்தனர். முன்னதாக நிறுவனத்தை கண்டித்து கோசம் எழுப்பினர். தொடர்ந்து ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர். இது குறித்து ஊழியர்கள் கூறுகையில், இந்நிறுவனம் தொடங்கி 15 ஆண்டுகள் ஆகிறது. இந்நிறுவனத்தில் 12 ஆண்டுகள் முதல் 2 ஆண்டுகள் வரை பணி புரியும் ஏராளமான ஊழியர்கள் உள்ளனர். இந்நிலையில் திடீரென எந்த ஒரு முன்னறிவிப்பும் இன்றி நிறுவனம் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த 3 மாதங்களாக எங்களுக்கு ஊதியம் வழங்கப்பட்ட நிலையில் எங்களது வருகை பதிவை, பதிவு செய்யாமல் இருந்துள்ளனர். மேலும் ஜனவரி மாதத்திற்கான ஊழியம் மற்றும் தொழிலாளர் நலச் சட்டம் கூறிய எந்த பணப்பலனையும் வழங்கவில்லை என தெரிவித்தனர். மேலும் நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி மிது நடவடிக்கை எடுக்க வேண்டும் மற்றும் தொழிலாளர்களுக்கான பலன்களை அரசு பெற்றுக்கொடுக்க வேண்டும் என கோரினர்.