ஒரு அமைச்சருக்கே பாதுகாப்பு இல்லையா ? மத்திய அமைச்சர் ரக்ஷா கட்சே மகளுக்கு பாலியல் தொல்லை..!

மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் ரக்ஷா கட்சேவின் மகள், மகாராஷ்டிராவின் ஜல்கான் மாவட்டத்தில் உள்ள சந்த் முக்தாய் யாத்திரையின்போது சில இளைஞர்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி இருக்கிறார்.
மகாசிவராத்திரி கொண்டாட்டங்களின்போது முக்தைநகர் பகுதியில் நடந்த இந்தச் சம்பவம் குறித்து அமைச்சர் ஞாயிற்றுக்கிழமை போலீசில் புகார் அளித்தார்.
காவல்துறையினரின் கூற்றுப்படி, குற்றம் சாட்டப்பட்டவர்கள் கண்காட்சியில் பல பெண்களை பின்தொடர்ந்து சென்று தவறாக நடந்துகொண்டிருக்கிறார். இதில் சந்தேகிக்கப்படும் நபர்களில் ஒருவரான அனிகேத் குய் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் ஆறு பேரை தேடும் பணி நடந்து வருகிறது. போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் பேசுகையில், குற்றம் சாட்டப்பட்டவர்களில் சிலர் அரசியல் கட்சியுடன் தொடர்புடையவர்கள் என்று தெரியவந்திருப்பதாகவும் தவறு செய்தவர்க்ள யாராக இருந்தாலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதி அளித்தார். “இது ஒரு வெட்கக்கேடான செயல். அவர்களை மன்னிக்க முடியாது, அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்,” என்று அவர் கூறினார்.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது ஏற்கெனவே வேறு வழக்குகள் உள்ளன என்றும் முக்தைநகர் போலீசார் கூறுகின்றனர். “பிப்ரவரி 28, 2025 அன்று, கோத்தாலி கிராமத்தில் நடந்த யாத்திரையின்போது, அனிகேத் குய் உட்பட ஏழு இளைஞர்கள் பெண்களைப் பின்தொடர்ந்து சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். அவர்கள் மீது தொடர்புடைய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது" என்று போலீசார் தெரிவிக்கின்றனர்.
முன்னாள் மகாராஷ்டிர அமைச்சர் ஏக்நாத் கட்சே, ரக்ஷா கட்சேவின் மாமனார். அவர் மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதாக விமர்சித்தார். “இவர்கள் மோசமான குற்றவாளிகள். குற்றவாளிகளுக்கு காவல்துறையினரைக் கண்டு பயம் இல்லாததால் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. சமூக அழுத்தம் காரணமாக பாதிக்கப்பட்ட பலர் இதுபோன்ற குற்றங்கள் குறித்து புகாரளிக்கத் தயங்குகிறார்கள்,” என்று அவர் கூறினார்.
இதே கருத்தை எதிரொலித்த என்சிபி (சரத் பவார் பிரிவு) தலைவர் ரோகிணி கட்சே, சாமானியப் பெண்களின் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுப்பினார். “மத்திய அமைச்சரின் மகளே மகாராஷ்டிராவில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானால், சாதாரண பெண்களுக்கும், சிறுமிகளுக்கும் நீதி கிடைக்கும் என்று எப்படி நம்புவது?” என்று அவர் கேட்டிருக்கிறார்.
இந்த வழக்கு மகாராஷ்டிர மாநிலத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. வழக்கில் தேடப்படும் குற்றவாளிகள் மீது விரைவான நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.