ஈஷாவின் மண் காப்போம் இயக்கம் சார்பில் பாரம்பரிய விதை திருவிழா..!
சத்குருவின் மண் காப்போம் இயக்கம் சார்பில், வேலூர் வி.ஐ.டி பல்கலைக்கழக வளாகத்தில், ‘பாரத பாரம்பரிய காய்கறி மற்றும் விதை திருவிழா மற்றும் கருத்தரங்கம்’ ஞாயிறன்று நடைபெற்றது.
இதில் 6 மாநிலங்களைச் சேர்ந்த 9 முன்னோடி விவசாயிகளுக்கு, ‘விதை பாதுகாவலர் விருதுகள் – 2026’ வழங்கப்பட்டது. வி.ஐ.டி பல்கலைக்கழகத்தின் துணைத்தலைவர் சங்கர் விஸ்வநாதன் விருதுகளை வழங்கி பேசுகையில்: கல்விப்பணி, ஐடி துறையில் இருப்பவர்களுக்கு வாரத்திற்கு ஒரு நாள் விடுமுறை இருக்கிறது. ஆனால், 24 மணி நேரமும் எந்தவித விடுப்பும் இல்லாமல் தொடர்ந்து வேலை செய்வது விவசாயிகள்தான். நாம் எப்போதும் ஒரே பயிரை நம்பி இருக்காமல், அந்தந்தக் காலத்திற்கும் நம்முடைய மண்ணிற்கும் ஏற்ற பயிர்களைப் ‘பயிர் சுழற்சி முறையில்’ பயிரிட வேண்டும் எனப் பேசினார்.
சிறப்புரையில் மரபின் மைந்தன் முத்தையா பேசுகையில்: சமூகப் பொறுப்புள்ள விவசாயி எவ்வாறு தரமான விதைகளை உற்பத்தி செய்து கொடுக்கிறாரோ, அதுபோல நாம் தரமான மாணவர்களை உருவாக்கித் தர வேண்டும் என்று கவிஞர் கண்ணதாசன் குறிப்பிட்டிருப்பார். ஆகையால்தான், தரமான பாரம்பரிய விதைகளை விவசாயிகளிடத்தில் கொண்டு சேர்க்க ஈஷாவின் மண் காப்போம் இயக்கம் நடத்தும் இவ்விழா, தரமான மாணவர்களை உருவாக்கும் வி.ஐ.டி வளாகத்தில் நடைபெறுவது மிகப்பொருத்தமானது எனக் குறிப்பிட்டார்.
கருத்தரங்கில் இயற்கை விவசாயத்தில் செலவைக் குறைத்து லாபம் ஈட்டும் வழிகள் குறித்துப் பல நிபுணர்கள் பேசினர். 100-க்கும் மேற்பட்ட அரங்குகள் கொண்ட பிரம்மாண்டக் கண்காட்சி அமைந்திருந்தது. இதில் 2000க்கும் மேற்பட்ட அரிய பாரம்பரிய விதை ரகங்கள், கிழங்கு வகைகள் மற்றும் இயற்கை விளைபொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டு விற்பனை செய்யப்பட்டன.
விதை பாதுகாவலர் விருதுகள்
தமிழ்நாடு காவல்துறையில் பணியாற்றிக் கொண்டே, பாரம்பரிய விதைகளை சேகரித்து பரவலாக்கம் செய்து வரும் மோகன் மற்றும் யுவராஜ், முன்னோடி விவசாயிகளான சேலத்தைச் சேர்ந்த சரவணன், ஹரியானாவைச் சேர்ந்த லாலு ராஜேஷ் குஹார், மகாராஷ்டிராவைச் சேர்ந்த அனில் கவாலி, குஜராத்தைச் சேர்ந்த ஹமீர்பாய் பைரயா, கேரளாவைச் சேர்ந்த நிஜாமுதீன் மற்றும் முகமது நாசிர் பாப் புட்டி, ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த சந்தூல் குமார் ரெட்டி ஆகிய 6 மாநிலங்களைச் சேர்ந்த 9 பேருக்கு விதை பாதுகாவலர் விருதுகள் வழங்கப்பட்டன.

