இரவு பகலா வேலை செஞ்சும் இந்த நிலைமையா? விபத்தில் பலியான பிளிங்கிட் ஊழியர்... 2.5 மணி நேரம் ரோட்டிலேயே கிடந்த சோகம்!

 
1

சோனிபட் பகுதியைச் சேர்ந்த சுமித் (25) என்ற இளைஞர் பிளிங்கிட் நிறுவனத்தில் டெலிவரி ஊழியராகப் பணியாற்றி வந்தார். ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 13, 2026) காலை, தனது இரவு நேரப் பணியை முடித்துக் கொண்டு, தனது நண்பர்களான பிரின்ஸ் மற்றும் சாஹில் ஆகியோருடன் ஒரே இருசக்கர வாகனத்தில் வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தார்.

சோனிபட்டில் உள்ள முர்தால் சாலையில் (Murthal Road) சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாகக் கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம், வீதியின் நடுவே இருந்த தடுப்புச் சுவரில் (Divider) பலமாக மோதியது. இதில் வாகனத்தில் இருந்த மூன்று பேரும் தூக்கி வீசப்பட்டனர்.

இந்த விபத்தில் தலையில் பலத்த காயமடைந்த சுமித், சம்பவ இடத்திலேயே துடிப்படித்து உயிரிழந்தார். தகவல் தெரிவித்தும் காவல் துறையினரின் தாமதமான வருகை மற்றும் நிர்வாகச் சீர்கேடு காரணமாக, சுமித்தின் உடல் சுமார் 2.5 மணி நேரத்திற்கும் மேலாகச் சாலையிலேயே அனாதையாகக் கிடந்ததாகக் கூறப்படுகிறது. பரபரப்பான சாலையில் உயிரிழந்தவரின் உடல் நீண்ட நேரம் கிடந்தது அப்பகுதி மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.


விபத்தில் படுகாயமடைந்த அவரது நண்பர்கள் பிரின்ஸ் மற்றும் சாஹில் ஆகியோரை மீட்ட பொதுமக்கள், உடனடியாக சோனிபட் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பிரின்ஸின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக மாறியதைத் தொடர்ந்து, மேல் சிகிச்சைக்காக ரோத்தக் பகுதியில் உள்ள பி.ஜி.ஐ.எம்.எஸ் (Rohtak PGIMS) மருத்துவமனைக்கு அவர் அவசரமாக மாற்றப்பட்டுள்ளார். சாஹிலுக்குத் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள சோனிபட் காவல்துறையினர், விபத்துக்கான காரணம் குறித்தும், உடலை மீட்பதில் ஏற்பட்ட தாமதம் குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். டெலிவரி ஊழியரின் மறைவு அவரது குடும்பத்தினரிடமும், உடன் பணியாற்றும் ஊழியர்களிடமும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.