First AC பெட்டியிலேயே இந்த நிலைமையா..? – ரயிலில் ₹2.5 லட்ச நகை திருட்டு... கதறி அழுத பெண் பயணி!

 
1

ஆனந்த் விஹார் டர்மினல் - நியூ ஜல்பைகுரி எக்ஸ்பிரஸ் (ரயில் எண்: 15726) ரயிலின் முதல் வகுப்பு ஏசி (First AC Coupe) பெட்டியில் பயணித்த பெண் ஒருவரிடமிருந்து ₹2.5 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் மற்றும் ₹25,000 ரொக்கப் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


பாதிக்கப்பட்ட பெண் கண்ணீருடன் வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவில், "எனது ரயில் எண் 15726. லக்னோ ரயில் நிலையத்தில் வைத்து முதல் வகுப்பு ஏசி கூப்பிற்குள் புகுந்த மர்ம நபர் ஒருவர் எனது ₹2.5 லட்சம் மதிப்புள்ள நகைகள் மற்றும் ₹25,000 ரொக்கப் பணத்தைத் திருடிச் சென்றுவிட்டார். நல்லவேளையாக எனது குழந்தையைக் கடத்திச் செல்லவில்லை. ரயிலை நிறுத்த 4 முறை அவசர சங்கிலியைப் பிடித்து இழுத்தும், ஒரு ரயில்வே போலீசாரோ (RPF) அல்லது டிடிஈ-யோ (TTE) உதவிக்கு வரவில்லை" என வேதனையுடன் கூறியுள்ளார்.


மேலும் தொடர்ந்த அவர், "யோகி ஆதித்யநாத் ஆட்சி நடக்கும் மாநிலத்தில் பயணிகளுக்கு எந்தப் பதிலும் பாதுகாப்பும் இல்லை. பூட்டிய ஏசி கூப்பிற்குள்ளேயே பாதுகாப்பு இல்லை என்றால் நாங்கள் என்ன செய்வது? ஒருவேளை எனது குழந்தையைக் கடத்திச் சென்றிருந்தால் நான் என்ன செய்திருப்பேன்?" எனப் பாதுகாப்பு குறித்துக் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் புயலைக் கிளப்பியதைத் தொடர்ந்து, லக்னோ அரசு ரயில்வே காவல் துறை (GRP) தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் பதிலளித்துள்ளது. அதில், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குத் தேவையான உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், உதவிக்காகத் தங்களது மொபைல் எண்ணைப் பகிருமாறு அல்லது 9454 40 25 45 என்ற எண்ணைத் தொடர்புகொள்ளுமாறு ஜிஆர்பி எஸ்பி கேட்டுக் கொண்டுள்ளார்.