இது தான் தமிழகத்திற்கு விடியலா..? இடிந்து விழும் பள்ளி மேற்கூரைகள்.. எங்கும் ஊழல் - ஓபிஎஸ் கண்டனம்!

 
1

ஓபிஎஸ் வெளியிட்ட அறிக்கையில், ஜெயலலிதாவின் நடவடிக்கைகள் காரணமாக அரசுப் பள்ளிகளுக்கு வரும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்தது. ஆனால், இந்த நிலை தற்போது மாறி, உயிரை பணயம் வைத்து பள்ளிகளுக்கு மாணவ மாணவியர் செல்ல வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டுள்ளது என்று விமர்சனம் செய்தார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே உள்ள வி.மாமாந்தூர் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மேற்கூரை இடிந்து விழுந்து மூன்று மாணவிகள் உள்பட நான்கு பேர் படுகாயம் அடைந்தததாகவும், ராமநாதபுரம் சாயல்குடி அருகில் உள்ள வாகைகுளம் அரசு தொடக்கப் பள்ளியில் மேற்கூரை இடிந்து விழுந்ததால் இரண்டு மாணவர்கள் காயமடைந்தனர், மதுராந்தகம் அடுத்த புதுப்பட்டுபள்ளியில் புதிதாக இரண்டு வகுப்பறைகள் கட்டப்பட்ட நிலையில், மூன்றே மாதத்தில்மேல் கூரை விழுந்து ஐந்து மாணவ, மாணவியர் படுகாயம் அடைந்தனர் என்று சுட்டிக்காட்டினார்.

திருச்சி மாவட்டம், துறையூர் அருகே சிங்களாந்தபுரம் ஒன்றிய துவக்கப் பள்ளியில் நேற்று காலை வகுப்பறைகள் திறக்கப்பட்டபோது ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வரை நடக்கும் அறையின் கான்க்ரீட் கூரை பெயர்ந்து விழுந்ததன் காரணமாக மாணவர்களின் இருக்கைகள், கல்வி உபகரணங்கள் சேதமடைந்துள்ளன என்று குறிப்பிட்ட அவர், இது மாணவர்கள் கல்வி பயிலும் நேரத்தில் நடைபெற்று இருந்தால் இளம் பிஞ்சுகள் பலத்த காயமடைந்திருப்பார்கள் என்றார்.

பள்ளிக் கட்டடம் கட்டப்பட்டு ஒன்பது மாதங்களில் அதன் மேற்கூரை இடிந்து விழுகிறது என்றால் அந்த அளவுக்கு ஊழல் தமிழ்நாட்டில் தலைவிரித்து ஆடுகிறது என்றுதான் அர்த்தம் என்ற அவர், அரசுப் பள்ளிகளில் மாணவ மாணவியரின் படிப்பினை, பாதுகாப்பினை உறுதி செய்ய வேண்டிய அரசே அவர்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துகிறது, அவர்களது கல்வியை பாழாக்குகிறது என்பது வேலியே பயிரை மேய்வதற்குச் சமம் என்று விமர்சித்தார்.

இந்த நிலையில் பள்ளிகள் இருந்தால், பெற்றோர்கள் எப்படி குழந்தைகளை பள்ளிகளுக்கு அனுப்புவார்கள் என்று கேள்வி எழுப்பிய ஓபிஎஸ், “அரசுக் கட்டடம் என்றால் அது அபாயகரமான கட்டடம் என்று மக்கள் நினைக்கும் அளவுக்கு நிலைமை மோசமாகிவிட்டது. முதலமைச்சர் இதில் தனிக் கவனம் செலுத்தி, மேற்படி பள்ளிக்கூடத்தின் மேற்கூரை இடிந்து விழும் அளவுக்கு தரமற்ற கட்டுமானப் பணியை மேற்கொண்ட ஒப்பந்ததாரர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். பழுதடைந்துள்ள அரசுக் கட்டடங்களை ஆராய்ந்து அவற்றை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.