"வந்தாரை வாழவைக்கும் தமிழகமா இது?" - பீகார் தொழிலாளி குடும்பக் கொலையில் தமிழக அரசை சாடும் பாமக நிறுவனர் ராமதாஸ்..!

 
1 1

பாமக கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டு உள்ள அறிக்கையில், வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாடு என்ற வாக்கியம் ஏட்டளவில்தான் என்பதற்கு சான்றுதான் பீகார் கூலி தொழிலாளி, அவரது மனைவி மற்றும் 2 வயது ஆண் குழந்தை கொலை.

இக்கொலைக்கு அடிப்படைக்காரணம் மது. ஒரு பெண், ஒரு குழந்தை இவர்களில் யாரையாவது கொல்ல வேண்டும் அல்லது அருகே உள்ள மதுவை அருந்த வேண்டும் என்ற கதைக்கேற்ப மதுவை அருந்திவிட்டு பெண்ணை அடைய தடையாக இருந்த குழந்தையை கொன்று பின் அப்பெண்ணையும் கொன்றதாக அக்கதை முடியும்.

ஆக மது அனைத்தையும் செய்ய வைக்கும் என்பதே இக்கதையின் சாராம்சம். அண்மையில் தஞ்சையில் நடைபெற்ற தி.மு.க. மகளிர் மாநாட்டில் பேசிய முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் பெண்களுக்கு பாதுகாப்பான சூழல் உருவாக்கியதால்தான் தமிழகத்தில் அதிக அளவிலான பெண்கள் தொழிற்சாலைகளில் பணியாற்றுகிறார்கள் என்றார்.

அப்படி சொன்ன மறுநாளே தமிழகத்தையே உலுக்கிய கொடூர கொலை. வேலை கேட்டு நம்பி வந்த குடும்பத்தை நம்பிக்கை துரோகம் செய்து மதுபோதையில் கொன்றதாக கொலையாளிகள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

ஆனால் பஞ்சம் பிழைக்க வந்த வெளிமாநிலத்தவரையும் விட்டுவைக்காத மதுபோதை ஒரு குடும்பத்தையே நிர்மூலமாக்கியுள்ளது. பெண்கள் அச்சமின்றி வாழ இனியாவது மதுவை அறவே ஒழிக்க அரசு மது கடைகளை நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும். இலவசங்களை அளிக்க மது வருவாயை தவிர்த்து வேறு வகையில் வருவாயை பெற பல வழிகள் உள்ளன என தெரிவித்து உள்ளார்.