இப்படியும் ஒரு கிராமமா..? அரசி பள்ளியை காக்க தனியார் பள்ளிகளுக்கு தடை விதித்த கிராமம்..!

 
1

தெலங்கானாவின் சின்னபோயினபள்ளி மற்றும் முப்பரம் ஆகிய இரு கிராம ஊராட்சிகளில் உள்ள அரசு நலத்திட்டப் பயனாளிகள், தங்களின் குழந்தைகளை அரசுப் பள்ளிகளை விடுத்துத் தனியார் பள்ளிகளில் சேர்த்தால், அவர்களுக்கு மானிய விலையில் வழங்கப்பட்டு வரும் அரிசி, சமூகப் பாதுகாப்பு ஓய்வூதியம் உள்ளிட்ட அரசு நலத்திட்டங்களை இழக்க நேரிடும் என தீர்மானம் நிறைவேற்றியுள்ளன.

அதுமட்டுமின்றி, சின்னபோயினபள்ளி கிராமத்தில் மாணவர்களை அழைத்துச் செல்வதற்கும், வீடுகளில் விட்டுச் செல்வதற்கும் வரும் தனியார் பள்ளி வாகனங்கள் கிராமங்களில் நுழையக் கூடாது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அரசுப் பள்ளிகளை வலுப்படுத்தவும், மாணவர் சேர்க்கையை அதிகரிக்கவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

சின்னபோயினபள்ளி கிராம ஊராட்சித் தலைவர் என். நாகார்ஜுனா இது குறித்துக் கூறுகையில், "தனியார் பள்ளிகளில் குழந்தைகளைச் சேர்க்கும் அளவுக்கு வசதி படைத்தவர்களுக்கு, அரசு ஏன் நலத்திட்டங்களை வழங்க வேண்டும்? கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளியை வலுப்படுத்துவதே எங்களின் நோக்கம். தனியார் பள்ளிகளில் குழந்தைகளைச் சேர்க்கும் குடும்பத்தினர் அரசின் நலத்திட்டங்களைப் பெறுகிறார்களா என்று கண்டறிந்து, அவற்றை நிறுத்துமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குப் பரிந்துரை செய்வோம்" என்று தெரிவித்தார்.

இந்த அதிரடி நடவடிக்கையின் பலனாக, அந்தப் பகுதியில் உள்ள டிஎன்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் ஒரே நேரத்தில் 103 மாணவர்கள் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளனர். அரசுப் பள்ளிகளின் தரத்தை உயர்த்துவதற்காக ஊராட்சிகள் இவ்வளவு தீவிரமாகச் செயல்படுவது, கல்வித்துறை மற்றும் சமூக ஆர்வலர்களிடையே கவனத்தை ஈர்த்துள்ளது.