யூடியூப் சேனல் பெயரில் இப்படியொரு மோசடியா? கோவை பெண் அளித்த ஒரே புகாரால் அம்பலமான 16 வழக்குகளின் பின்னணி!

 
Q

கோவையை சேர்ந்தவர் விக்னேஷ்வரி. சுயதொழில் ஆர்வலரான இவர், வீட்டிலிருந்தபடியே சமையல் பொருட்கள் மற்றும் இயற்கை அழகு சாதனப் பொருட்களைத் தயாரித்து விற்பனை செய்து வருகிறார்.

தனது தயாரிப்புகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் விதமாக, நான் கற்றது' (Naan Katradhu) என்ற பெயரில் யூடியூப் (YouTube) சேனல் ஒன்றையும் அவர் நடத்தி வருகிறார். இந்த சேனலில், சமையல் மற்றும் அழகு சாதனப் பொருட்களைத் தயாரிக்கும் முறைகள் குறித்த பயனுள்ள விளக்க வீடியோக்களை அவர் பதிவிட்டு வருகிறார். இதன் மூலம் தனது தயாரிப்புகளுக்கான சந்தை வாய்ப்பை உருவாக்கி, வெற்றிகரமான பெண் தொழில்முனைவோராக வலம் வருகிறார் விக்னேஷ்வரி.

இந்தநிலையில் விக்னேஷ்வரி கோவை சைபர் கிரைம் போலீசில் திருச்செந்தூரைச் சேர்ந்த சங்கரநாயனார் மகன் மணிகண்டன் (வயது 37) என்பவர் மீது ஒரு புகார் கொடுத்தார். அந்த புகாரில் விக்னேஷ்வரி கூறியிருப்ப தாவது:-

யூடியூப்பில் நான் பதிவிடும் வீடியோக்களை திருடி, திருச்செந்தூர் மணிகண்டன் என்ற பெயரில் யூடியூப் சேனல் நடத்தி வரும் மணிகண்டன் தனது யூடியூப் சேனலில் பதிவிட்டு வந்தார். மேலும் எனது தொழில் மற்றும் நான் விற்பனை செய்யும் பொருட்கள் குறித்தும், என்னை பற்றியும் எந்தவித ஆதாரமும் இல்லாமல் பொய்யான குற்றச்சாட்டுக்களையும், அவதூறுகளையும் பரப்பினார். எனது பெண்மைக்கு பங்கம் விளை விக்கும் வகையில் எனது புகைப்படங்களையும், வீடியோக்களையும் பதிவிட்டு அவதூறு பேசி வந்தார்.

கண்டித்த போது எனது தொழிலில் நஷ்டத்தை ஏற்படுத்தும் வகையில் என்னை இத்துடன் முடித்து விடுவேன் என கூறி மிரட்டலும் விடுத்து வருகிறார். இது தொடர்பாக அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

இதுதொடர்பாக சைபர்கிரைம் போலீசார் திருச்செந்தூர் மணிகண்டன் மீது வழக்குப்பதிவு செய்து அவரை தேடினர். அப்போது அவர் நீலகிரி மாவட்டம் ஊட்டியில் பதுங்கி இருந்தது தெரியவந்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் லிங்கேஸ்வரன் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்று மணிகண்டனை கைது செய்தனர். கைதான மணிகண்டன் மீது தமிழ்நாடு முழுவதும் 16 வழக்குகள் இருப்பது தெரிய வந்தது. மணிகண்டனை போலீ சார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்

,