சசிகலா விவகாரத்தில் இவ்வளவு துரோகமா? ஈபிஎஸ் மீது ஓபிஎஸ் சுமத்தியுள்ள 'லெட்டர்' புகார்..!

 
ops

தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் திமுக சார்பில் "தமிழ்நாடு தலைகுனியாது" என்ற தலைப்பில் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு பரப்புரையில் ஈடுபட்டார்.

கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் பேசுகையில், ”அண்ணா உருவாக்கிய திமுகவில் இணைந்ததால்தான் நாங்கள் இன்று மகிழ்ச்சியாக இருக்கிறோம். ஜெயலலிதா மறைந்த பிறகு பல்வேறு இடர்பாடுகள், சோதனைகளை கண்டுள்ளேன். அரசியலில் எந்த மூலையிலும் நான் இருந்துவிட கூடாது என்ற நோக்கத்தில் பழனிசாமி பல துரோகங்களை செய்தார். ஆனால், அந்த துரோகங்களுக்கு இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மூலம் எங்களுக்கு விடிவுக்காலம் பிறந்திருக்கிறது” என அவர் கூறினார்.

தொடர்ந்து பேசிய ஓபிஎஸ், ”அண்ணா, எம்ஜிஆர், கருணாநிதி, ஜெயலலிதா, ஸ்டாலின் இவர்கள்தான் மக்களின் நம்பிக்கையை பெற்று அவர்கள் மூலம் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். ஆனால் நான் உட்பட எடப்பாடி பழனிசாமி எல்லாம் நியமன முதலமைச்சர்கள்தான். ஜெயலலிதா எனக்கு இரண்டு முறை கொடுத்த முதலமைச்சர் பதவியை மீண்டும் அவரிடமே கொடுத்து விட்டேன். சசிகலா எனக்கு மூன்றாவது முறையாக கொடுத்த முதலமைச்சர் பதவியை அவர் கேட்டதும் கொடுத்தேன்.

ஆனால், எடப்பாடி பழனிசாமி தரையில் ஊர்ந்து சென்று சசிகலாவின் காலில் விழுந்து முதலமைச்சர் பதவியை பெற்றார். ஆனால், சசிகலாவுக்கே அவர் துரோகம் செய்தார். சசிகலாவின் கணவர் இறந்த நிலையில், இறுதிச்சடங்கு செய்வதற்கு ஒரு மாதம் அவர் பரோல் கேட்டார். ஆனால், சசிகலாவுக்க மூன்று நாட்கள் மட்டுமே பரோல் வழங்க வேண்டும் என கடிதம் எழுதியவர் எடப்பாடி பழனிசாமி. தமிழ்நாட்டின் உள்ள அரசியல்வாதிகளிலேயே நன்றி உணர்வு இல்லாத அரசியல்வாதி என்றால், அது எடப்பாடி பழனிசாமி தான்” என விமர்சித்தார்.

மேலும் பேசிய அவர், மத்திய அரசு நிதி கொடுக்காத நிலையிலும் மாநில அரசின் நிதி மூலமாக அனைத்து திட்டங்களையும் செயல்படுத்தியவர் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் என்றும், மீண்டும் தமிழ்நாட்டின் முதலமைச்சராக அவரே வருவார்” எனவும் ஓபிஎஸ் பேசினார்.