ஜனநாயகன் படத்தில் அந்நிய சக்திகள் நாட்டில் மதப் பிரச்சினை ஏற்படுத்துவதுபோல காட்சி?
ஜனநாயகன் படத்தில் அந்நிய சக்திகள் நாட்டில் பிரச்னை ஏற்படுத்துவது போலவும், மத நல்லிணக்கத்துக்கு ஊறு விளைவிப்பது போலும் காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக கூறப்பட்ட புகார் தீவிரமானது, படத்தை திரையிடும் முன் இதுசம்பந்தமாக முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும் என்பதால் படம் மறு ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக, சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ஜனநாயகன் படத்துக்கு சான்று வழங்கும்படி தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக சென்சார் போர்டு தாக்கல் செய்த மேல் முறையீட்டு வழக்கில், தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா ம்ற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வு பிறப்பித்த உத்தரவில், அந்நிய சக்திகள் நாட்டில் மதப் பிரச்சினையை உருவாக்கும் வகையிலும், மத நல்லிணக்கத்திற்கு ஊறு விளைவிக்கும் வகையிலும், ராணுவம் சம்பந்தப்பட்ட காட்சிகளும், வசனங்களும் இடம் பெற்றுள்ளதாக புகாரில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த புகார் தீவிரமானது. படத்தை திரையிட அனுமதிக்கும் முன், இதை தீவிரமாக ஆய்வு செய்ய வேண்டும் என்பதால், படம் ம்று ஆய்வு குழுவுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
சென்சார் போர்டுக்கு பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் வழங்காதது தவறு எனத் தெரிவித்துள்ள நீதிபதிகள், படத்தை மறு ஆய்வுக்கு அனுப்புவது குறித்த முடிவு முன்கூட்டியே தெரிவிக்கப்பட்ட போதிலும், அந்த முடிவுக்கு எதிராக கோரிக்கை வைக்காமல் பட நிறுவனம் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல எனவும் கோரிக்கை வைக்காத நிலையில் முடிவை ரத்து செய்து உத்தரவு தெரிவிக்க முடியாது எனவும் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் ரிட் மனுவைத் தகுந்த முறையில் திருத்தி தாக்கல் செய்ய வாய்ப்பை வழங்கப்படுவதாகவும், திருத்த மனு தாக்கல் செய்யப்பட்ட பிறகு, மனுவை தகுதியின் அடிப்படையில் விரைவாக விசாரிக்க முறையீடலாம் என்று தெரிவித்துள்ள நீதிபதிகள், படத்தை மறுஆய்வுக்குழுவின் ஆய்வுக்கு அனுப்பும் முடிவு, சட்டப்படி நடந்ததா இல்லையா என்பதைத் தீர்மானிக்கும் அதிகாரம் தனி நீதிபதிக்கு உள்ளது என்பதை தெளிவுபடுத்துகிறோம் என்றும் தெரிவித்துள்ளனர்.


