டாஸ்மாக் பார்களில் 'ரெஸ்டோ பார்' வசதியா? - தமிழக அரசின் புதிய திட்டம்!
கோவையில் நேற்று அமைச்சர் விக்னேஷ் அளித்த பேட்டி:
மதுபான கொள்முதலில், தி.மு.க., - அ.தி.மு.க சார்ந்த ஆலைகள் என்ற எந்த பாகுபாடுமின்றி, 11 நிறுவனங்களிடம் இருந்தும் சமமாக கொள்முதல் செய்யப்படுகிறது. கடந்த திராவிட இயக்க கட்சிகளின் ஆட்சிகளில், சம்பாதிப்பதற்காகவே, ஊழல் நிறைந்த துறையாக இத்துறையை வைத்திருந்தனர்.
டாஸ்மாக் கடைகள் முழுமையாக சரியான நடைமுறைக்கு வந்த பின், 'மனமகிழ் மன்றம்' எனப்படும் எப்.எல்.2 கடைகளின் மீது கவனம் செலுத்தப்படும். 'டாஸ்மாக் பார்'களில் சுகாதாரமற்ற முறையில் உணவுகள் வழங்கப்படுவதாக புகார்கள் எழுகின்றன.
எனவே, விரைவில் வெளியாக உள்ள, 'டாஸ்மாக் பார்' டெண்டர்களில், உணவகம் நடத்தி கொள்ளும் அனுமதியை வழங்கும் யோசனை பரிசீலனையில் உள்ளது. மது பாட்டிலுக்கு, கூடுதல் விலை வசூலிக்கும் பிரச்னைக்கு தீர்வுகாணும் வரை டாஸ்மாக் ஊழியர்கள், 'சஸ்பெண்ட்' நடவடிக்கை தொடரும். 10 ரூபாய் ஸ்டிக்கர் ஒட்டிய காலி மது பாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தில் நான்கு ஆயிரம் டாஸ்மாக் கடைகளில் 'ரிவர்ஸ் வெண்டிங்' மெஷின் அமைப்பதற்கான டெண்டர் வரும் அக்., 5ம் தேதி திறக்கப்பட உள்ளது. பேட்டிகளின் போது, டாஸ்மாக் பற்றியே அதிக கேள்விகள் கேட்கப்படுவதால் அது சார்ந்தே பதில்கள் அளிக்கப்படுகின்றன; ஆனால் எங்களது ஒட்டுமொத்த இலக்கு, போதை இல்லா தமிழகத்தை உருவாக்குவது மட்டுமே.
இவ்வாறு அவர் கூறினார்.

