தமிழகத்தில் சமூக விரோதிகளுக்கான ஆட்சி நடக்கிறதா? அண்ணாமலை கேள்வி

 
annamalai

தமிழகத்தில் மக்களுக்கான ஆட்சி நடக்கிறதா அல்லது சமூக விரோதிகளுக்கான ஆட்சி நடக்கிறதா? என்று அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது சமூகவலைத்தள பக்கத்தில், சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் பகுதியில், மணல் கொள்ளையைத் தடுக்கச் சென்ற கிராம நிர்வாக அலுவலர் மீது, மணல் கொள்ளையர்கள் கடுமையான தாக்குதல் நடத்தியுள்ளனர். அதே போல, வேலூர், பொன்னையாற்றில் சட்டவிரோதமாக மணல் அள்ளுவதை வீடியோ எடுத்த, முன்னாள் ராணுவ வீரர் உமாபதி அவர்களை, சமூக விரோதிகள் கொலை செய்யும் நோக்கில் அரிவாளால் வெட்டியுள்ளனர்.

Annamalai

தங்கள் கடமையைச் செய்யும் அரசு அதிகாரிகள் மீதும் சமூக அக்கறைக் கொண்ட பொதுமக்களின் மீதும், தமிழகம் முழுவதும் சமூக விரோதிகள் தாக்குதல் நடத்துவது  தொடர்கிறது. அதிகாரிகளை அவர்களது அலுவலகத்திலேயே கொலை செய்வதும், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கூட அதிகாரிகளுக்குப் பாதுகாப்பில்லாமல் இருப்பதும் பொதுமக்களை அச்சத்தில் ஆழ்த்தியிருக்கிறது. இதனைத் தடுக்கக் கையாலாகாமல் இருக்கிறது ஊழல் திமுக அரசு. 


அரசு அதிகாரிகளுக்கும் பொதுமக்களுக்கும் உயிர் பாதுகாப்பு இல்லையென்றால், தமிழகத்தில் மக்களுக்கான ஆட்சி நடக்கிறதா அல்லது சமூக விரோதிகளுக்கான ஆட்சி நடக்கிறதா என்பதை முதலமைச்சர் திரு ஸ்டாலின்  தெளிவுபடுத்த வேண்டும்.என்று குறிப்பிட்டுள்ளார்.