விஜய்க்கு ஒரு நியாயம்..? சீமானுக்கு ஒரு நியாயமா..? போலிஸை வறுத்தெடுத்த நீதிபதி!

 
1

சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் வழக்கறிஞர் தீரன் திருமுருகன் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், "வலைப்பேச்சு மீடியாவைச் சேர்ந்த பிஸ்மி மற்றும் தமிழன் கோகுல் உள்ளிட்டோர், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குறித்து மிகவும் தரக்குறைவாகவும், ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் மற்றும் தரக்குறைவான பதிவுகள் செய்து சீமான் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தி வருகின்றனர்.

இது அரசியல் உள்நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்ட அவதூறு பிரசாரம். இதுகுறித்து காவல்துறை உயர் அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும், இதுவரை எவ்வித முதல் தகவல் அறிக்கையும் (FIR) பதிவு செய்யப்படவில்லை. எனவே, கடந்த ஜூலை 3 அன்று அளித்த புகாரை பரிசீலித்து, சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி விக்டோரியா கௌரி அமர்வு முன் இன்று (ஜூலை 28) விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "சீமான் மீது தொடர்ந்து அவதூறான கருத்துக்களை இந்த யூடியூப்பர்கள் திட்டமிட்டு பதிவு செய்து வருகின்றனர். புகார் மனு அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் காவல்துறை எடுக்கவில்லை" என வாதிட்டார்.

இதைக் கேட்ட நீதிபதி, "திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன், முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறாக பேசியதற்கு காவல்துறை உடனடி நடவடிக்கை எடுத்தது. சீமான் விஷயத்தில் ஏன் நடவடிக்கை இல்லை. சீமானை பொருத்தவரை தேர்தலில் தோற்கலாம், வெற்றி பெறலாம். ஆனால் தற்போதைய சூழலில் தமிழ்நாட்டில் தவிர்க்க முடியாத ஒரு அரசியல்வாதியாக அவர் உருவாகி உள்ளார்" என்றார்.

அப்போது மனுதாரர் தரப்பில், "பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் இடம் விவகாரத்தில் அமைச்சர் ரமேஷ் ரூ. 100 கோடி பெற்றதாக பேசியதற்கு யூடியூபர் மீது உடனடியாக வழக்கு பதிவு செய்யப்பட்டு, அவர் சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால், சீமான் குறித்து பேசினால் நடவடிக்கை எடுப்பதில்லை" என தெரிவிக்கப்பட்டது.

இதைக் கேட்ட நீதிபதி, "இதற்கு மட்டும் எப்படி உடனடியாக நடவடிக்கை எடுத்தீர்கள். காவல்துறை பாரபட்சம் பார்க்கிறதா? ஒரு தலைவர் குறித்து அவதூறாகவோ அல்லது அசிங்கமாகவோ பேசுவதை வேடிக்கை பார்க்க முடியாது. இந்த வழக்கை பொறுத்தவரை யூடியூபர்கள், சீமானை மிகவும் கொச்சையாகவும், தரக்குறைவாகவும் விமர்சித்துள்ளனர்.இதனை ஏற்க முடியாது.

எனவே, இதுகுறித்து வழக்கு பதிவு செய்து, நாளை (அதாவது இன்று) நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். அவதூறு வீடியோக்களை நீக்க வேண்டும்" என கூறி வழக்கு விசாரணை ஒத்திவைத்து உத்தரவிட்டார்.