மெரினா கடற்கரைக்குச் செல்ல கட்டணமா?- சென்னை மாநகராட்சி விளக்கம்

மெரினா கடற்கரைக்குச் செல்ல கட்டணம் வசூலிக்கப்படும் என வெளியான தகவலை சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் மறுத்துள்ளார்.
சென்னை மெரினா கடற்கரையை இயற்கையான சூழலில் பொதுமக்கள் பயன்படுத்தவே நீலக்கொடி கடற்கரை திட்டம் கொண்டுவரப்பட உள்ளது. கோவளம் கடற்கரை பகுதி ஊராட்சிக்குள் வருவதால் பராமரிப்பு பணிகளுக்காக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மாறாக மெரினா நீலக்கொடி கடற்கரை திட்டத்தில் கட்டணம் வசூலிக்கப்படாது. அதேசமயம் மெரினா கடற்கரைக்குச் செல்ல கட்டணம் வசூலிக்கப்படும் என வெளியான தகவல் தவறானது என சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் விளக்கம் அளித்துள்ளார். மேலும் வருவாய் அதிகம் உள்ள மாநகராட்சி என்பதால் பராமரிப்பு பணிகளுக்கான கட்டணத் தொகையை மாநகராட்சியே ஈடு செய்யும் என்றும் அவர் கூறியுள்ளார்.
சென்னையில் உள்ள உலகின் இரண்டாவது நீளமான கடற்கரையான மெரினா கடற்கரை நீலக்கொடி (Blue Flag) சான்றிதழ் பெறவுள்ளது. இந்த சான்றிதழை பெறுவதற்காக, இந்த கடற்கரையில் பல உலக தர வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளது. இந்த சான்றிதழ், டென்மார்க்கில் உள்ள சுற்றுச்சூழல் கல்வி அறக்கட்டளை நிறுவனம் மூலம் வழங்கப்படுகிறது. நீலக்கொடி என்பது சுற்றுச்சூழல் மேலாண்மை, சுத்தமான மணல், சுற்றுலாப் பயணிகளுக்கான வசதிகள், குளிக்க தகுந்த சுகாதாரமான நீர் மற்றும் பாதுகாப்பு ஆகிய 33 முக்கிய அம்சங்களின் அடிப்படையில் வழங்கப்படும். இந்த சான்றிதழ் பெறப்பட்ட கடற்கரை பாதுகாப்பான மற்றும் சுகாதாரம் கொண்டதாக இருக்க வேண்டும். நீலக்கொடி பட்டியலில் இடம் பெறும் கடற்கரை, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை அதிகளவில் ஈர்க்கும். ஆகவே நீலக்கொடி கடற்கரை திட்டம் மூலம் 6 கோடி செலவில் மெரினா கடற்கரை மேம்படுத்தப்பட உள்ளதாக அமைச்சர் கே.என்.நேரு கூறியுள்ளார்.