சட்டமன்றத்தில் கேள்விகளுக்கு பதிலளிக்க 93 நாட்கள் தாமதமா? - திமுக எம்.எல்.ஏ ஆஸ்டின் கோரிக்கையும் சபாநாயகர் பதில்.!

 
1

சட்டமன்றத்தில் உறுப்பினர்கள் கேள்வி எழுப்பி 93 நாட்கள் ஆகியும் அதற்குரிய பதில்கள் துறைகளிடமிருந்து வரவில்லை என திமுக சட்டமன்ற உறுப்பினர் ஆஸ்டின் வைத்த கோரிக்கைக்கு, சட்டமன்றப் பேரவைத் தலைவர் (சபாநாயகர்) மற்றும் அவை முன்னவர் ஆகியோர் பதிலளித்து பேசினர்.

சட்டமன்றத்தில் பேசிய திமுக உறுப்பினர் ஆஸ்டின், சட்டப்பேரவை விதி 45-ன் படி உறுப்பினர்கள் எழுப்பும் வினாக்களுக்கு குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் பதிலளிக்கப்பட வேண்டும் என்பதைச் சுட்டிக்காட்டினார். உறுப்பினர்கள் பேரவையில் கேள்வி அளித்தால், 15 நாட்களுக்குள் அது அனுமதிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பப்பட வேண்டும். துறைகளிலிருந்து 42 நாட்களுக்குள் அதற்கான பதில்கள் பேரவைக்கு வரவேண்டும். தவிர்க்க முடியாத காரணங்களால் மேலும் 14 நாட்கள் (2 வாரங்கள்) கால அவகாசம் வழங்கப்படலாம். ஆனால், கேள்வி கொடுத்து 93 நாட்கள் கடந்துவிட்ட நிலையிலும் பல கேள்விகளுக்கு துறைகளிடம் இருந்து பதில்கள் வராததால், மக்களின் அடிப்படைத் தேவைகள் மற்றும் பிரச்சனைகள் விவாதத்திற்கு வருவதில் காலதாமதம் ஏற்படுவதாக அவர் குற்றம்சாட்டினார். மேலும், விதிமுறைகளின்படி காலதாமதம் செய்யும் அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

உறுப்பினர் ஆஸ்டின் எழுப்பிய பிரச்சனைக்கு பதிலளித்து பேசிய அவை முன்னவர், சட்டமன்ற உறுப்பினர்களின் வினாக்களுக்கு துறைகள் விரைந்து பதிலளிப்பதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். அனைத்து அமைச்சர்களும் இதற்கு முன்னுரிமை அளித்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள் என்றும் உறுதியளித்தார்.

"வினாக்கள் மற்றும் விடைகள் குறித்து ஆய்வு செய்து பார்த்தேன். இப்போது சட்டமன்றத்தில் உள்ளவர்களில் பலர் புதிய உறுப்பினர்கள் என்பதால் சில கேள்விகளுக்கு பதில் வருவதில் தாமதம் நிலவுகிறது. இருப்பினும், இதுவரை வரிசைப்படுத்தி வகைப்படுத்தியதில் ஏறத்தாழ 50 கேள்விகளுக்கு பதில்கள் வந்துவிட்டன. ஒரே துறையைச் சேர்ந்த கேள்விகளே மீண்டும் மீண்டும் வராமல் இருக்க, ஒரு நாளைக்கு குறைந்தது ஐந்து கேள்விகளாவது எடுத்து விவாதத்திற்கு வைக்குமாறு அலுவலகத்திற்கு அறிவுறுத்தியுள்ளேன்." மேலும், கடந்த காலங்களில் 2021-ல் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு 2025 வரை கூட பதில்கள் வராமல் இருந்த நிகழ்வுகள் எல்லாம் உண்டு என்பதையும் சபாநாயகர் சுட்டிக்காட்டினார்.