மகளிருக்கு கொடுத்த ரூ.5000 ஆதி திராவிடர், பழங்குடியினர் நலத்திற்காக ஒதுக்கப்பட்ட நிதியா? வெளியான தகவல்
சில ஊடகங்களில், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்திற்காக ஒதுக்கப்பட்ட நிதி, கலைஞர் மகளிர் உரிமைத் தொகை (KMUT) திட்டத்தின் கீழ் ரூ.5,000 வழங்குவதற்காக மாற்றி பயன்படுத்தப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டு முற்றிலும் தவறானதும் ஆதாரமற்றது என தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “சில ஊடகங்களில், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்திற்காக ஒதுக்கப்பட்ட நிதி, கலைஞர் மகளிர் உரிமைத் தொகை (KMUT) திட்டத்தின் கீழ் ரூ.5,000 வழங்குவதற்காக மாற்றி பயன்படுத்தப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டு முற்றிலும் தவறானதும் ஆதாரமற்றதும் ஆகும் என்பதை அரசு தெளிவுபடுத்துகிறது. முதலில், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட எந்த நிதியும் வேறு திட்டங்களுக்கு மாற்றி பயன்படுத்தப்படவில்லை. அரசின் வரவு-செலவுத் திட்ட முறையின் படி, ஒவ்வொரு திட்டத்திற்கும் ஒதுக்கப்படும் மொத்த நிதிக்குள் "பொது", "ஆதி திராவிடர்", "பழங்குடியினர்" என தனித்தனி கணக்கு தலைப்புகள் குறிப்பிடப்படுகின்றன. இந்த நடைமுறை, கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் உட்பட தமிழ்ப்புதல்வன் திட்டம், புதுமைப்பெண் திட்டம், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நலத் திட்டம் போன்ற அனைத்து தனிநபர் பயனாளி சார்ந்த திட்டங்களிலும் பின்பற்றப்படுகிறது.
ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் தலைப்பின் கீழ் ஒதுக்கப்படும் நிதி, அந்த சமூக பயனாளிகளுக்காக மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். அந்த நிதியை வேறு சமூகங்களுக்கோ அல்லது வேறு நோக்கங்களுக்கோ பயன்படுத்த முடியாது. இது அரசின் நிலையான நிதி ஒழுங்குமுறையின் ஒரு பகுதியாகும். இவ்வாறு, KMUT திட்டத்திற்கும், ஆதி திராவிட மற்றும் பழங்குடியின பயனாளிகளுக்கு தனி தலைப்பின் கீழ் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இது தவிர, KMUT திட்டத்தின் கீழ் ரூ.5,000 வழங்குவதற்கான கூடுதல் செலவு, இத்திட்டத்திற்கான தனி கூடுதல் நிதி ஒதுக்கீட்டின் மூலம் மேற்கொள்ளப்படுகிறது. ஏற்கனவே உள்ள ஆதி திராவிடர் பழங்குடியினர் திட்டங்களுக்கான நிதியில் இருந்து எடுக்கப்படவில்லை. எனவே, நிதி மாற்றம் (Diversion) நடந்ததாக கூறுவது முற்றிலும் தவறானது. மேலும், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல நிதியை பாதுகாக்க அரசு தனிப்பட்ட சட்டத்தை இயற்றியுள்ளது. அந்தச் சட்டத்தின் படி, இந்த சமூகங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதி அவர்களுக்காக மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஒரு நிதியாண்டில் பயன்படுத்தப்படாத தொகை இருந்தாலும், அது பொதுநிதியாக மாறாது. அடுத்த நிதியாண்டில் அதே நோக்கத்திற்காக எடுத்துச் செல்லப்பட வேண்டும் என்ற சட்டப் பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளது. எனவே, கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்காக ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல நிதி மாற்றி பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டு முழுமையாக ஆதாரமற்றது. ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூகங்களின் நலன் மற்றும் முன்னேற்றத்திற்கு அரசு உறுதியாக செயல்பட்டு வருகிறது. சட்ட விதிமுறைகளையும் நிதி ஒழுங்கையும் கடைப்பிடித்து, உரிய நிதி உரிய பயனாளிகளுக்கே சென்றடைவதை அரசு தொடர்ந்து உறுதி செய்து வருகிறது. எனவே, எந்த ஒரு திட்டத்துக்கும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பயனாளிகளுக்கான தனித் தலைப்பில் ஒதுக்கப்படும் நிதியை ஏற்கனவே உள்ள நலத்திட்டங்களில் இருந்து மாற்றி தருவதாக கூறுவது முற்றிலும் தவறானதாகும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

