"கரண்ட் பில் அதிகமா வருதா?" – இனி ஒரே கிளிக்கில் புகார் கொடுக்கலாம்! மின்சார வாரியத்தின் மாஸ் சேவை!

 
TNEB திடீர் அதிரடி! 90 நாட்களுக்கு மேல் பயன்பாட்டில் இல்லாத மின் இணைப்புகள் துண்டிப்பு

தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் உத்தரவின்படியும், மின்சாரம் மற்றும் சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார் அறிவுறுத்தலின்படியும், பொதுமக்களின் மின்சார சேவை தொடர்பான புகார்களை எளிதாகப் பதிவு செய்து, அவற்றை விரைவாகவும் காலதாமதமின்றியும் உரிய அலுவலர்களிடம் கொண்டு சேர்த்து, விரைவான குறைதீர் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில், தமிழ்நாடு மின்சார வாரியத்தின் சார்பில் 24 x 7 செயல்படும் புதிய “WHATSAPP TNEB CHATBOT” வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மின்சார வாரியம், பொதுமக்களுக்கு தடையற்ற மற்றும் சீரான மின்சாரத்தை வழங்குவதற்குத் தேவையான பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதோடு, மின்சார விநியோகம் உள்ளிட்ட பல்வேறு சேவைகள் குறித்த புகார்களை எளிதாக அளிப்பதற்கும் உரிய வசதிகளை ஏற்படுத்தி வருகிறது.

இந்நடவடிக்கையின் அடுத்த கட்டமாக, மின்சார சேவைகள் குறித்த புகார்களை விரைவாகக் கையாளுவதற்கும், அவற்றை உரிய அதிகாரிகளிடம் காலதாமதமின்றி கொண்டு சேர்த்து, குறித்த காலத்தில் தீர்வு வழங்குவதற்கும் ஏதுவாக 24 x 7 செயல்படும் “TNEB CHATBOT” எனும் புதிய வசதி உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த சேவையை பெற WHATSAPP செயலியில் 94987 94987 என்ற எண்ணிற்கு HI என பதிவிட வேண்டும். இதனையடுத்து அலைபேசி எண் அல்லது மின் இணைப்பு எண் மூலம் புகார் குறித்த விவரங்கள் பெறப்பட்டு, சம்பந்தப்பட்ட அலுவலருக்கு உடனடியாக அனுப்பப்பட்டு, புகாரை சீர் செய்ய உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

இந்த தானியங்கி புகார் அளிக்கும் வசதியின் மூலம் பொதுமக்கள் மேலும் எளிதாகவும், விரைவாகவும் மின்சார சேவைகளை பெற ஏதுவாகும். மின்சார சேவை தொடர்பான பொதுமக்களின் குறைகளை உடனுக்குடன் தீர்த்து, சிறப்பான மின்சார சேவையை வழங்குவதற்கு தொடர்ந்து தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது" என அதில் கூறப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த திமுக ஆட்சியில் இருந்ததை விட மின்சார கட்டணம் கூடுதலாக இருப்பதாக பல்வேறு இடங்களில் குற்றச்சாட்டு எழுந்த நிலையில், இது தொடர்பாக முழுமையான ஆய்வு செய்ய மின்சார வாரிய அதிகாரிகளுக்கு தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.