உடைகிறதா திமுக - மதிமுக கூட்டணி..? ஜூன் 27 அன்று தெரிந்துவிடும்..!
திமுக தலைமையிலான கூட்டணியில் நீண்டகாலமாக அங்கும் வகித்துவந்த காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கம்யூனிஸ்டுகள், விசிக ஆகிய கட்சிகள் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு அளித்தன. அத்துடன், கம்யூனிஸ்டுகள் தவிர்த்து பிற கட்சிகள் முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக அமைச்சரவையிலும் இடம்பெற்றுள்ளனர்.
இந்த நிலையில் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் மதிமுக என்ன நிலைப்பாடு எடுக்கப் போகிறது என்ற பெரும் எதிர்பார்ப்பு எழுந்தது.
சட்டமன்றத் தேர்தலில் முதலமைச்சர் ஜோசப் விஜய் சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார். அதில் திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்த நிலையில், கடந்த 1ம் தேதி திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள திருச்சி சென்ற முதலமைச்சர் விஜய்யை மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ நேரில் வரவேற்றார்.
திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் முதலமைச்சரை வரவேற்றதாகவும், வளர்ச்சி திட்டங்கள் தொடர்பாக அவரை விரைவில் சந்திக்க உள்ளேன் என்றும் அரசியல முக்கியத்துவம் வாய்ந்த தமது இந்த சந்திப்புக்கு துரை வைகோ செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்திருந்தார்.மேலும், 'துரதிருஷ்டவசமாக நாங்கள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டோம். அந்த சின்னத்தில் போட்டியிட்ட காரணத்தால் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு அளிக்க முடியாத சூழல் ஏற்பட்டது' என்று துரை வைகோ கூறியதும் திமுக கூட்டணியில் மேலும் சலசலப்பை ஏற்படுத்தியது.
திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா, தொடராதா என்ற சந்தேகம் நீடித்துவரும் நிலையில், தவெகவுடன் மதிமுக நாளுக்கு நாள் இணக்கத்தை அதிகப்படுத்தி கொண்டே வருகிறது.
குறிப்பாக அமைச்சர்களின் ஆய்வுக் கூட்டத்தில் துரை வைகோ கலந்து கொள்வது, தவெகவின் நிர்வாக ரீதியிலான முடிவுகளை வரவேற்று பேசுவது என்று தொடர்ச்சியாக மதிமுக தவெக இடையே இணக்கம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனைத் தொடர்ந்து சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் விஜய்யை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நேரில் சந்தித்து பேசினார்.
திமுக கூட்டணியில் தொடர்வதா? தவெக கூட்டணியில் இணைவதா? இரண்டு சட்டமன்ற உறுப்பினர்களின் பதவியை என்ன செய்வது? என்பன உள்ளிட்ட பல்வேறு முக்கிய விவகாரங்கள் தொடர்பாக, வரும் ஜூன் 27ஆம் தேதி நடைபெற உள்ள மதிமுக பொதுக்குழு கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், மதிமுகவின் பெரும்பாலான நிர்வாகிகள் திமுக கூட்டணியில் இருந்து வெளியேறி தவெக கூட்டணியில் இணைய வேண்டும் வெளிப்படையாகவே பேசி வருகின்றனர்.
இதனிடையே, தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, "தவெகவுடன் கூட்டணி அமைப்பது தொடர்பான முடிவு பொதுக்குழுவை கூட்டி ஆலோசித்த பிறகு எடுக்கப்படும்" என்று தெரிவித்து உள்ளது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

