12ம் வகுப்பு முதல் தேர்வு வினாத்தாள் கடினமா?- மாணவர்கள் விளக்கம்

தமிழ்நாடு முழுவதும் இன்று 12ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற்றது. முதல் நாள் மொழிப்பாடம் எளிதாக இருந்ததாகவும், அனைவரும் தேர்ச்சி அடையும் வகையில் கேள்வித்தாள் இருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர்.
தமிழ்நாடு மாநில பாடத்திட்டத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு இன்று தொடங்கியது. முதல் நாளான இன்று மொழிப்பாடத்துடன் தொடங்கிய 12ம் வகுப்பு பொதுத் தேர்வை 8,21, 057 மாணவர்கள் எழுதினர். மாநிலம் முழுவதும் 7,518 பள்ளிகளை சேர்ந்த மாணவர்களுக்காக 3,316 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டன. பொதுத்தேர்வை கண்காணிக்க 43,446 கண்காணிப்பாளர்களும், 4,470 பறக்கும் படையினரும் நியமிக்கப்பட்டனர். 3,78,545 மாணவர்கள், 4,24,023 மாணவிகள் 18,344 தனித்தேர்வர்கள், சிறைவாசி தேர்வர்கள் 145 என 8,21,057 மாணவர்கள் தேர்வு எழுதினர்.
சென்னை மாவட்டத்தை பொருத்தவரை 65,641 மாணவ மாணவிகள் இன்றைய 12-ம் வகுப்பு பொது தேர்வு எழுதினர். இவர்களுக்காக 242 தேர்வு மையங்களும், 5 வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களும் அமைக்கப்பட்டன. சென்னையில் மாற்றுத்திறனாளிகளுக்காக 310 சொல்வதை எழுதுபவர்கள்(Scribel நியமிக்கப்பட்டனர். முதல் நாள் பொதுத்தேர்வு ஏற்பாடுகளை நாகப்பட்டினம் நகராட்சியில் உள்ள நடராஜன் தமயந்தி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
சென்னை அசோக் நகரில் உள்ள பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை செயலாளர் சந்திரமோகன் ஐ.ஏ.எஸ், அரசு தேர்வுகள் இயக்குனர் லதா, சென்னை மாவட்ட தேர்வு பொறுப்பு அதிகாரியான தனியார் பள்ளிகள் இயக்குனர் பழனிச்சாமி ஆகியோர் தேர்வு மையத்தை ஆய்வு செய்தனர். காலை 10 மணிக்கு தொடங்கிய மொழிப்பாட தேர்வு பிற்பகல் 1.15 மணிக்கு நிறைவடைந்தது. தமிழ் மொழி பாடத் தேர்வு எளிதாக இருந்ததாகவும், ஒரு மதிப்பெண் கேள்விகளைத் தவிர அனைத்து கேள்விகளும் மிக எளிதாக இருந்ததாக தேர்வெழுதிய மாணவர்கள் தெரிவித்தனர். இதேபோல் மற்ற தேர்வுகளுக்கான வினாத்தாளும் எளிதாக இருக்கும் என மாணவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.