தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் தனியார்மயமாகிறதா?.. அமைச்சர் விக்னேஷ் விளக்கம்..!

 
1

தமிழகத்தில் டாஸ்மாக் மதுபானக் கடைகளைத் தனியார்மயமாக்குவது குறித்தும் அரசு ஆராய்ந்து வருவதாக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று (நவ.2) செய்தியாளர்களிடம் பேசிய அவர், டாஸ்மாக் தனியார்மயமே ஆகாது என்று தாங்கள் கூறவில்லை என்றும், 2003-ல் ஜெயலலிதா தனியார் மதுக்கடைகளை மூடியதற்கான காரணத்தையும், இத்தகைய பெரிய முடிவை எடுப்பதற்கான சூழலையும் ஆராய வேண்டியுள்ளது என்றும் கூறினார். 

 டாஸ்மாக் கடை ஊழியர்கள் நேற்று திடீரென கடையை மூடி போராட்டம் நடத்திய நிலையில், அமைச்சர் விக்னேஷின் இந்த பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டாஸ்மாக் கடையடைப்பு போராட்டம், டாஸ்மாக் பணியாளர்களுக்கான சீருடை உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து அவர் பேசியதாவது;-

“த.வெ.க. அரசு ஆட்சிக்கு வந்த பிறகு டாஸ்மாக் ஊழியர்களுக்கான சம்பளத்தை 14 ஆயிரம் ரூபாயில் இருந்து 33 ஆயிரம் ரூபாய் வரை கொண்டு வந்திருக்கிறோம். வாரத்தில் ஒருநாள் வார விடுமுறை, மாதத்தில் 2 நாட்கள் விடுமுறை, இலவச சீருடை கொடுத்திருக்கிறோம், சீருடையை தைப்பதற்கு ரூ.6,000 கொடுத்திருக்கிறோம், பண்டிகை காலங்களுக்காக ரூ.20,000 கொடுக்கிறோம், கடன், மருத்துவக் காப்பீடு என டாஸ்மாக் பணியாளர்களுக்காக நிறைய திட்டங்களை செய்து கொடுத்துள்ளோம்.

டாஸ்மாக் பணியாளர்கள் கடையில் இருக்கும்போது மட்டும் சீருடையை அணிந்து கொண்டால் போதும். உண்மையான ஊழியர் யார் என்பதை அறிவதற்காகவே சீருடை வழங்கப்பட்டுள்ளது. டாஸ்மாக் பணியாளர்கள் கண்ணியமாக மதிக்கப்பட வேண்டும் என்பதற்காகத்தான் நான் முயற்சிகளை செய்து வருகிறேன். அந்த முயற்சிக்கு ஒத்துழைப்பு கொடுங்கள்.

நேற்று டாஸ்மாக் கடையடைபால் அரசுக்கு வருமானம் இழப்பு ஏற்பட்டிருந்தாலும், சுமார் 10 லட்சம் பேராவது நேற்று குடிக்காமல் இருந்திருப்பார்கள், 150 ரூபாயை அவர்களின் குடும்பத்திற்கு கொடுத்திருப்பார்கள் என்பதில் தனிப்பட்ட முறையில் எனக்கு சந்தோஷம்.”

இவ்வாறு அவர் தெரிவித்தார்.