விஜய்க்கு பதிலடி கொடுக்கிறாரா ஸ்டாலின்? ஒரே மேடையில் ஸ்டாலின் - ராகுல் காந்தி!
தமிழகத்தில் 2026 தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைப்பெறும் என அறிவித்தார். ஒரே கட்டமாக தேர்தல் நடைப்பெறும் என்றும், மே 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது.
2026 தமிழக சட்டமன்ற தேர்தலானது திமுக கூட்டணி, அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, நாம் தமிழர், தவெக என 4 முனை போட்டியாக உள்ளது. இதற்கிடையே ராமதாஸ் - சசிகலா ஆகிய இருவரும் இணைந்து ஒரு கூட்டணியை உருவாக்கியுள்ளார்கள்.
மேலும், வரும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சியினர் மாநிலம் முழுவதும் தீவிர பிரச்சார பணியில் தற்போது ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில், திமுக கூட்டணியில் உள்ள கூட்டணி கட்சி தலைவர்களான, செல்வப்பெருந்தகை, திருமாவளவன், பிரேமலதா விஜயகாந்த், வைகோ, சண்முகம், வீரபாண்டியன், உள்ளிட்டவர்களும், அதேபோல அதிமுக கூட்டணியில் உள்ள கூட்டணி கட்சி தலைவர்களான டிடிவி தினகரன், ஜி.கே. வாசன், அன்புமணி ராமதாஸ் ஆகியோரும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
அதிமுக தேசிய ஜனநாயக கூட்டணியை பொறுத்தவரையில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் நிதின் நபின், பாஜக தேசிய முன்னாள் தலைவர் ஜே.பி. நட்டா உள்ளிட்ட தேசிய தலைவர்கள் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தியுள்ளனர். இதேபோல், திமுக-விற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய டெல்லியின் முன்னாள் முதலமைச்சரும், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய தலைவருமான அர்விந்த் கெஜ்ரிவால் இரண்டு நாள் பயணமாக தமிழகம் வருகை புரிய உள்ளதாக தகவல் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
இந்நிலையில், திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் சார்பில் ராகுல்காந்தி கலந்துக் கொண்டு தேர்தல் பிரச்சாரம் செய்ய இருப்பது தற்போது தெரிய வந்திருக்கின்றது. வரும் ஏப்ரல் 20 ஆம் தேதி பெரம்பூரில் நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினும், ராகுல் காந்தியும் ஒரே மேடையில் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.
உண்மையான காங்கிரஸ் தொண்டர்கள் தவெக பக்கம் இருப்பதாக கூறிய விஜய் போட்டியிடும் பெரம்பூர் தொகுதியில் ராகுல் காந்தி - முதலமைச்சர் இருவரும் இணைந்து பிரச்சாரம் செய்ய இருப்பது முக்கிய அரசியல் நிகழ்வாக பார்க்கப்படுகிறது. இதற்கு முன்னதாக வருகிற 19 ஆம் தேதி ஓசூரில் நடக்கும் பரப்புரை கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலினுடன் இணைந்து அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பரப்புரை மேற்கொள்ள இருப்பதும் தெரிய வந்துள்ளது.


