என்னுடன் நேருக்கு நேர் விவாதிக்க ஸ்டாலின் தயாரா? இபிஎஸ் சவால்..!
சென்னையில் நடைபெற்ற அரசியல் கருத்தரங்கத்தில் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டார். அப்போது அங்கு கேட்கப்பட்ட பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார். இவ்வாறு அவர் பதிலளித்து பேசியதை ஒரு தொகுப்பாக இங்கு பார்க்கலாம். எடப்பாடி பழனிசாமியின் பேச்சு விவரம்:
ஒவ்வொரு கட்சியும் கூட்டணி அமைக்கும் பணியில் மும்முரமாக உள்ளது. அதிமுகவும் என்.டி.ஏ கூட்டணியை அமைத்து தேர்தலுக்கு தயாராகிவிட்டோம். ஏற்கனவே 185 தொகுதிகளில் எழுச்சிப்பயணத்தை முடித்துவிட்டேன். 2026ல் தமிழகத்தில் அதிமுகதான் ஆட்சிக்கு வரவேண்டும் என்று மக்கள் முடிவு செய்துவிட்டார்கள்.
கருத்துக் கணிப்புகளின் கணக்குகள் வேறு மாதிரி இருக்கலாம். ஆனால், மக்களுடைய கணக்கு வேறு மாதிரி இருக்கிறது. திமுக ஆட்சி அகற்றப்பட வேண்டும் என்ற முடிவுக்கு மக்கள் வந்துவிட்டனர். இந்த தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணி 210 தொகுதிகளில் வெற்றி பெறும். அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். இந்த 5 ஆண்டு திமுக ஆட்சியில் மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை. துன்பத்தைதான் அனுபவித்துள்ளனர். அதனால் எங்களுக்கு இந்தத் தேர்தலில் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் 2 லட்சம் வாக்குகள் குறைந்ததால்தான் எதிர்க்கட்சியாக இருக்கிறோம். நாங்கள் பாஜகவிடம் அடிமையாக இருப்பதாக திமுக சொல்கிறது. உண்மையில், திமுகதான் காங்கிரஸிடம் அடிமையாக இருக்கிறது. 2024-இல் நாங்கள் தனியாகத் தானே நின்றோம். அடிமை என்றால் எப்படி தனியே சென்றிருக்க முடியும்? எங்களை விமர்சிக்க ஒவ்வொன்றாக தேடித்தேடி பார்த்துச் சொல்கிறார் ஸ்டாலின்.
எப்போது பார்த்தாலும் பாஜகவுக்கு அடிமை என்கிறார். எந்த விதத்தில் அடிமை? நாங்கள் கூட்டணி அமைத்ததால் அடிமையாம். அப்படியென்றால், 1999, 2001-இல் பாஜகவோடு திமுக கூட்டணி அமைத்ததை என்னவென்று சொல்வது? முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அவ்வளவுதான் அரசியல் ஞானம்.
ஒரே மேடையில் சந்திக்க தயாரா?
திமுகவின் குடும்ப ஆட்சியையும், வாரிசு அரசியலையும் மக்கள் வெறுக்கின்றார்கள். அவர்களின் கோபத்தை இந்தத் தேர்தலில் பார்க்க முடியும். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீராக இல்லை. போதைப் பொருள் நிறைந்த மாநிலமாக மாறிவிட்டது. இந்தியாவிலேயே கடன் வாங்குவதில் முதல் மாநிலம் என்ற பெயரை தமிழ்நாடு பெற்றுள்ளது. திறமையற்ற ஒருவர் முதலமைச்சராக இருப்பதே இதற்கு காரணம்.
ஸ்டாலினிடம் பொது விவாதத்திற்க்கு நான் பலமுறை சவால் விட்டுவிட்டேன். அவர்தான் அதற்கு வரவில்லை. ஸ்டாலின் எங்கே கூப்பிட்டாலும் விவாதத்திற்கு வர நான் தயார். என்னுடன் ஒரே மேடையில் நேருக்கு நேர் விவாதம் செய்ய அவர் தயாராக இருக்கிறாரா?
விஜய் பேச்சு ஒரு பொருட்டே அல்ல
திமுகவுக்கும், தவெகவுக்கும் இடையேதான் போட்டி என விஜய் கூறுகிறார். விஜய் பேசுவதை எல்லாம் நாங்கள் ஒரு பொருட்டாகவே பார்க்கவில்லை. பிறகு எப்படி அவருக்கு பதில் சொல்ல முடியும்? களத்தில் இறங்கினால்தான் யார் பலசாலி என்பது தெரியவரும்.
Instagram link : https://www.instagram.com/reels/DUn_6ykikO1/

