#BREAKING பாஜகவில் இருந்து விலகுகிறாரா சரத்குமார்?
பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் சரத்குமார் அக்கட்சியிலிருந்து விலகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் சரத்குமார் அக்கட்சியிலிருந்து விலகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாஜகவில் உரிய அங்கீகாரம் கிடைக்காட அதிருப்தியில் சென்னை தியாகராய நகரில் தனது ஆதரவாளர்கள் மற்றும் ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் சரத்குமார் ஆலோசனை மேற்கொண்டுவருகிறார். சரத்குமாருக்கு பாஜகவில் முக்கியத்துவம் வாய்ந்த பொறுப்பு வழங்கப்படவில்லை என்பதால்தான் இம்முடிவு என அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர். பாஜகவில் வழங்கப்பட்ட பொறுப்புகளில் இருந்து விலக தயார் என அவரது ஆதரவாளர்கள் கருத்து கூறியுள்ளனர். தேசிய அளவில் பதவி தருவதாக அளித்த வாக்குறுதியை பாஜக நிறைவேற்றவில்லை என்பதே சரத்குமார் ஆதரவாளர்களின் ஆதங்கம். மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்க வேண்டுமென்றும் அவர்கள் சரத்குமாரிடம் வலியுறுத்திவருகின்றனர்.
இன்று நடந்த ஆலோசனை கூட்டத்தில் பேசிய சரத்குமார் ஆதரவாளர்கள், "மத்திய அரசின் திட்டங்களை தமிழகத்தில் கொண்டு சேர்த்தவர் நம்முடைய தலைவர்தான். அவரை எல்லா ஊர் நிகழ்ச்சிகளுக்கும் பேச அழைக்கிறார்கள். ஆனால், என்ன பதவியில் என்ன பொறுப்பில் இருக்கிறோம் என கூறிக்கொண்டு தலைவரால் கூட்டத்துக்கு செல்ல முடியும்? இன்று காலை பாஜகவில் பரப்புரை குழு என ஒன்றை அறிவித்திருக்கிறார்கள். அதில் கூட தலைவர் பெயர் இல்லை. தென் மாவட்டங்களில் தலைவர் இறங்கினால் கூட்டம் அள்ளும். ஆனால், அதற்கு கூட தலைவரை பயன்படுத்தாமல் முடக்கிவிட்டார்கள். நம்முடைய கட்சியை நாம் கலைத்திருக்கக்கூடாது." என்றார்.

