2030-ல் மனித குலத்திற்கு எண்ட் கார்டா? 'கிளாட் ஏ.ஐ' சி.இ.ஓ சொன்ன அதிர்ச்சி உண்மை...!!
அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவைச் சேர்ந்த, 'ஆந்த்ரோபிக்' நிறுவனம், 'கிளாட் ஏ.ஐ.,' செயலி மற்றும் ஏ.ஐ., ஆராய்ச்சியில் உள்ள முன்னணி நிறுவனம். இதில் பணியாற்றி விலகிய ஜேக்கப் காக்சன் என்ற தகவல் தொழில்நுட்ப நிபுணர், சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், 'ஏ.ஐ., தொழில்நுட்பத்தை உருவாக்குபவர்கள், 2030க்குள் ஏ.ஐ., மனிதர்களை அழித்து விடும் என்பதை உண்மையாகவே நம்புகின்றனர்' என எச்சரித்திருந்தார்.
இது குறித்து, 'ஆந்த்ரோபிக்' தலைமை நிர்வாக அதிகாரி டாரியோ அமோடெய், அமெரிக்க ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டி: ஜேக்கப் காக்சன் கூறிய கருத்துடன் நான் அதிகமாக உடன்படுகிறேன். அவர் ஆந்த்ரோபிக்கை விட்டு வெளியேறியபோது, 'ஆந்த்ரோபிக் தான் மிகவும் பொறுப்புடன் செயல்படும் நிறுவனம்; இந்த பிரச்னைகளை மிகவும் நன்றாக உணர்ந்துள்ள நிறுவனமும் அதுதான்' என்றார். அவர் எங்களை குறை கூறவில்லை. ஒட்டுமொத்த ஏ.ஐ., துறையும் மிக வேகமாக முன்னேறுவதை பற்றித்தான் அவர் கவலை தெரிவித்தார். ஏ.ஐ., மனிதர்களை அழிக்கும் என்பதற்கு எத்தனை சதவீதம் சாத்தியம் என்று கேட்டால், அதற்கு பதிலில்லை. அதன் பாதைகள் எங்கு செல்கின்றன என்பதை பார்ப்பது பயனுள்ளதாக இருக்கும். நாம் சரியான பாதையில் சென்றால், தவறு நடப்பதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு.தவறான பாதையில் சென்றால், அந்த வாய்ப்பு மிக அதிகமாக இருக்கலாம். எனவே, சரியான பாதையை தேர்வு செய்யும் நம் திறனில் கவனம் செலுத்த வேண்டும். அதற்கு ஏ.ஐ., துறை ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். உலக நாடுகளும் ஒன்றிணைய வேண்டும்.நாம் மிகவும் மெதுவாக இத்துறையில் முன்னேறினாலும், தவறான நபர்களின் கைகளில் இந்த தொழில்நுட்பம் செல்வதற்கான வாய்ப்பு உள்ளது. அப்போது விபரீதம் ஏற்படும் அபாயம் அதிகரிக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.
டாரியோ அமோடெய் கூறியுள்ள கருத்துகளுக்கு அமெரிக்காவைச் சேர்ந்த, 'ஓபன் ஏ.ஐ.,' நிறுவனர் சாம் ஆல்ட்மேன், 'எக்ஸ் ஏ.ஐ.,' நிறுவனர் எலான் மஸ்க் ஆகியோர் ஆதரவு தெரிவித்துள்ளனர் .சமூக வலைதளத்தில் சாம் ஆல்ட்மேன் வெளியிட்ட பதிவில், 'முன்னணி ஏ.ஐ., வளர்ச்சியின் வேகத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்பதில் டாரியோவுடன் நான் உடன்படுகிறேன். இது தொடர்பாக சில வாரங்களாக ஓபன் ஏ.ஐ.,யில் முக்கியமான ஆலோசனைகள் நடக்கின்றன. நிறுவனத்துடன் தொடர்பில்லாத சுதந்திரமான மதிப்பீட்டாளர்களை நியமிப்பது சிறந்த யோசனை' என, குறிப்பிட்டுள்ளார்.எலான் மஸ்க்கும், 'டாரியோ சொல்வது சரி' என தெரிவித்துள்ளார்.

