மக்களுக்கு கடன் சுமையை தந்தது தான் திராவிட மாடல் சாதனையா? - இபிஎஸ் சரமாரி கேள்வி..!

 
1 1

 தஞ்சாவூர் அருகே வண்ணாரப்பேட்டை பகுதியில் தண்ணீர் இன்றி கருகும் பயிர்களை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பார்வையிட்டு விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், ''தஞ்சையில் விவசாயிகள் நடவு செய்த பயிர்கள் விளைச்சல் பெற வேண்டும் என்றால், இன்னும் இருபது தினங்களுக்கு தண்ணீர் பாய்ச்ச வேண்டும். அப்படி தண்ணீர் பாய்ச்சினால் மட்டுமே நடவு செய்த பயிர்களுக்கு விளைச்சல் கிடைக்கும். விவசாயிகள் கடன் வாங்கி கஷ்டப்பட்டு நடவு செய்த பயிர்களுக்கு சரியாக தண்ணீர் பாய்ச்சவில்லை என்றால் பதராகிப் போய்விடும். பயிர்கள் காய்ந்து சேதம் ஆகிவிடும். விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுவிடும்.

எனவே இந்த அரசு விவசாயிகளின் தேவைக்கு தண்ணீர் திறக்க வேண்டும். 20 நாட்களுக்கு தண்ணீர் திறந்தால் விளைச்சல் முடிந்து விடும். அவர்களுக்கு வருமானம் கிடைக்கும். இந்த அரசுக்கு தேவையான உற்பத்தி கிடைக்கும். இதனை நம்பி தான் விவசாயிகளின் வாழ்வாதாரம் உள்ளது'' என்று கூறினார். இந்த நிகழ்வில் முன்னாள் அமைச்சர்கள் காமராஜ், விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

முன்னதாக திருவையாறில் அதிமுக வடக்கு ஒன்றிய செயலாளர் இல்ல திருமண விழாவில் கலந்துகொண்டு பேசிய இபிஎஸ், ''அ.தி.மு.க., வலுமையான இயக்கமாக இருந்து கொண்டிருக்கிறது. டெல்டா மாவட்டம் விவசாயிகள் நிறைந்த மாவட்டம். டெல்டா மாவட்ட விவசாயிகள் பல்வேறு இயற்கை சீற்றங்களால் சோதனைகளை சந்தித்து கொண்டிருக்கிறார்கள். அப்படி சோதனை வரும் போதெல்லாம் விவசாயிகளுக்கு நேசக்கரம் நீட்டிய இயக்கம் அ.தி.மு.க அரசு. கடைக்கோடி விவசாயிகளுக்கு தங்குதடையின்றி தண்ணீர் செல்ல எல்லா கால்வாய்களையும் தூர்வாரினோம்.

2021-ம் ஆண்டு முதல்வராக பொறுப்பேற்ற ஸ்டாலின், இதுவரை 5 லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்கியுள்ளார். மக்களின் தலைகளில் கடனை சுமத்தியது தான் ஸ்டாலின் அரசின் சாதனை. வேறு எந்த சாதனையும் செய்யவில்லை. நிர்வாகத் திறமையின்மை, விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்கேடு, போதைப்பொருள் விற்பனை, போதை ஆசாமிகளால் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை நடக்காத நாளே இல்லை. அப்படிப்பட்ட ஆட்சி இன்றைக்கு நடைபெற்று கொண்டிருக்கிறது.

விரைவில் தேர்தல் வர இருக்கிறது. தேனீக்கள் போல செயல்பட்டு, அ.தி.மு.க.,வை ஆட்சிக்கு கொண்டு வர வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்'' என பேசினார்.