கோவில் மாநகரமா இல்ல குப்பை மாநகரமா..? – தமிழக அரசுக்கு ஆர்.பி. உதயகுமார் கேள்வி..!
அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் வெளியிட்ட வீடியோவில்,
"மதுரை மாநகராட்சியில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 5-ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தனியார்மயத்தை கைவிட வேண்டும். ‘அவர்லேண்ட்’ நிறுவனத்தை வெளியேற்ற வேண்டும். தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். தீபாவளி போனஸ் வேண்டும் உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மைப் பணியாளர்களின் இந்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது.
போராட்டம் காரணமாக தூய்மைப் பணியாளர்கள் வீடு, வீடாகச் சென்று குப்பைகளை சேகரிக்காததால், பொதுமக்கள் குப்பைகளை மூட்டைகளாக கட்டி சாலையோரங்கள் மற்றும் தெருக்களில் கொட்டும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் மதுரை மாநகரின் பல்வேறு பகுதிகளில் குப்பைகள் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. மதுரை மாநகராட்சி பகுதிகளில் தினமும் 1,000 டன்னுக்கும் அதிகமான குப்பைகள் சேகரிக்கப்பட்டு அகற்றப்படும் நிலையில், தூய்மைப் பணியாளர்களின் தொடர் வேலைநிறுத்தத்தால் பல பகுதிகளில் குப்பைகள் தேங்கியுள்ளன.
வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், குப்பைகள் தேக்கம் சுகாதாரப் பிரச்னைகளை ஏற்படுத்தும் அபாயத்தை உருவாகியுள்ளது. குப்பை வரி, சொத்து வரி, பாதாள சாக்கடை வரி உள்ளிட்ட பல்வேறு வரிகளை பொதுமக்களிடம் வசூலிக்கும் மாநகராட்சி நிர்வாகம், அதற்கேற்ப அடிப்படை வசதிகளையும் சுகாதாரமான சூழலையும் உறுதி செய்ய வேண்டும்.
மதுரையில் உள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் தவெகவுக்கு மக்கள் ஆதரவு அளித்திருக்கிறார்கள். அந்த மக்களுக்கு தற்போது குப்பை தான் பரிசாக கிடைத்துள்ளது. கோவில் மாநகரமாக அடையாளம் காணப்படும் மதுரை, தற்போது குப்பை மாநகரமாக காட்சியளிக்கிறது.
எனவே, தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கைகளுக்கு விரைந்து தீர்வு கண்டு, மதுரை மாநகரம் முழுவதும் தேங்கியுள்ள குப்பைகளை உடனடியாக அகற்ற தமிழக அரசும், மாநகராட்சி நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என ஆர்.பி. உதயகுமார் வலியுறுத்தினார்.

