வட மாநிலத்தவர் நியமனமா? - போக்குவரத்துத் துறை பதில்
ஓட்டுநர், நடத்துநர்களாக வெளிமாநிலத்தவர்கள் நியமனம் என்பது தவறானது என போக்குவரத்துத் துறை விளக்கம் அளித்துள்ளது.
போக்குவரத்துக்கழகத்தில் நடத்துநர் பணிக்கு வடமாநிலத் தொழிலாளர்களை த.வெ.க அரசு பணியமர்த்தப்படுவதாக தகவல் வெளியானது. 1800 நடத்துநர் பணிகளை ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்ய, உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த நிறுவனம் ஒன்றுடன் ஒப்பந்தம் செய்துள்ள த.வெ.க அரசைக் கண்டித்துப் போக்குவரத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் ஓட்டுநர், நடத்துநர்களாக வெளிமாநிலத்தவர்கள் நியமனம் என்பது தவறானது என போக்குவரத்துத் துறை விளக்கம் அளித்துள்ளது. இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், “வட மாநிலத்தவர்கள் ஓட்டுநர்கள், நடத்துநர்களாக நியமனம் செய்ய முடியாது.காலி பணியிடங்களுக்கு தற்காலிக அடிப்படையில் மட்டுமே ஓட்டுநர், நடத்துநர் நியமனம் செய்யப்படுகிறது. தமிழக போக்குவரத்துத் துறை பணிகளுக்கு தமிழ் மொழி கட்டாயத் தகுதி என்ற நிபந்தனை உள்ளது. தமிழில் எழுத, படிக்கத் தெரிந்திருப்பதால் மட்டுமே வட மாநிலத் தொழிலாளர்கள் நியமிக்கப்படமாட்டார்கள்” எனக் குறிப்பிட்டுள்ளது.

