வானில் பறந்த டைனோசர் காலத்து உயிரினமா? மில்லியன் கணக்கானோரை அதிரவைத்த வீடியோ!

 
1

மெக்சிகோவின் சியுடாட் ஜுவாரெஸ் (Ciudad Juárez) பகுதியில் உள்ள வானில் டைனோசர் காலத்தைச் சேர்ந்த ‘டெரோடாக்டில்’ (Pterodactyl) எனப்படும் பறக்கும் உயிரினம் தென்பட்டதாக ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. இரவு நேரக் கண்காணிப்பு கேமராவில் பதிவானது போல் காட்சியளிக்கும் அந்த வீடியோவில், பெரிய இறக்கைகளுடன் கூடிய மர்ம உருவம் ஒன்று வானில் பறந்து செல்வது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

இந்த வீடியோ இணையத்தில் மில்லியன் கணக்கான பார்வைகளைப் பெற்ற நிலையில், பலரும் இது அடையாளம் தெரியாத பறக்கும் பொருள் (UFO) அல்லது அழிந்துபோன உயிரினமாக இருக்கலாம் எனப் பதிவிட்டு வருகின்றனர். எனினும், சுமார் 6.6 கோடி ஆண்டுகளுக்கு முன்பே பூமியிலிருந்து முற்றிலுமாக அழிந்துவிட்ட டெரோடாக்டில் உயிரினம் தற்போதைய காலகட்டத்தில் உயிருடன் இருப்பதற்கு அறிவியல் ரீதியாக எந்த வாய்ப்பும் இல்லை என ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

வைரலாகி வரும் இந்தக் காட்சிகள் குறித்து விளக்கமளித்துள்ள சியுடாட் ஜுவாரெஸ் நகரின் சிவில் பாதுகாப்புத் துறை (Civil Protection) அதிகாரிகள், இந்த வீடியோவிற்கு எந்தவித உண்மையான அடிப்படையும் இல்லை எனத் தெரிவித்துள்ளனர். மேலும், இது செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் மற்றும் கணினி கிராபிக்ஸ் மூலம் உருவாக்கப்பட்ட ஒரு புனையப்பட்ட காட்சி என்றும், இரவு நேரக் கேமராவில் பதிவான ஒரு பெரிய வகை கொக்கு இனப் பறவையின் உருவம் தவறாகச் சித்தரிக்கப்பட்டுள்ளதாகவும் நிபுணர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

சமூக வலைதளங்களில் பரவும் இதுபோன்ற ஆதாரமற்ற மற்றும் எடிட் செய்யப்பட்ட வீடியோக்களைப் பொதுமக்கள் நம்ப வேண்டாம் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். இணையத்தில் பகிரப்படும் மர்ம வீடியோக்களின் உண்மைத் தன்மையைச் சரிபார்த்த பிறகே மற்றவர்களுக்குப் பகிர வேண்டும் எனத் தொழில்நுட்ப வல்லுநர்களும் வலியுறுத்தியுள்ளனர்.