நெய்யில் கலப்படமா?.. திண்டுக்கல் ஏ.ஆர்.டெய்ரி நிறுவனத்தில் அதிகாரிகள் ஆய்வு..
திருப்பதி லட்டு விவகாரத்தில் சிக்கிய திண்டுக்கல் ஏ.ஆர்.டெய்ரி புட்ஸ் நிறுவனத்தில் அதிகாரிகள் திடீரென ஆய்வு மேற்கொண்டனர்.
ஆந்திராவில் கடந்த ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சி காலத்தில் திருப்பதி தேவஸ்தானத்திற்கு ஒரு கிலோ நெய் ரூ.320 முதல் ரூ.411 என்ற விலையில் 5 நிறுவனங்கள் நெய் விநியோகம் செய்து வந்தன. இதில் ஒரு நிறுவனமான திண்டுக்கல்லை சேர்ந்த ஏ.ஆர்.டெய்ரி ஃபுட் நிறுவனம் திருப்பதி தேவஸ்தானத்துக்கு கடந்த 5 ஆண்டுகளாக நெய் அனுப்பி வந்துள்ளது. இந்த நிலையில் திருப்பதி லட்டு தரம் குறைந்துவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், புதிதாக ஆட்சியமைத்துள்ள சந்திரபாபு நாயுடு அரசு இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிட்டது.
அதன்படி கடந்த ஜூலை 6ம் தேதி முதல் 12ம் தேதி வரை கொள்முதல் செய்யப்பட்ட நெய்யை குஜராத்தில் உள்ள (தேசிய பால்வள மேம்பாட்டு வாரியம்) என்டிடிபி பரிசோதனை மையத்துக்கு கடந்த ஜூலை மாதத்தில் நெய் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆய்வு முடிவில், நெய்யில் கலப்படம் செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இந்த நெய்யில் மீன் எண்ணெய், மாட்டின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் பெரும் சர்ச்சையாக வெடித்த நிலையில், ஏ.ஆர். டெய்ரி நிறுவனம் தங்களது நெய் தரமானது என விளக்கமளித்திருந்தது. இந்த நிலையில் திண்டுக்கல் ஏ.ஆர்.டெய்ரி நிறுவனத்தில் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரப்படுத்துதல் ஆணையத்தின் அதிகாரிகள் மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் சோதனை நடத்தினர். மேலும் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட நிறுவன தயாரிப்புகளான பால், நெய் உள்ளிட்ட பொருட்களின் மாதிரிகளை சேகரித்துச் சென்றுள்ளனர்.