முதலமைச்சர் ஆக்கிய சசிகலாவை கட்சியிலிருந்து நீக்கிய எடப்பாடி துரோகியா? அல்லது நாங்கள் துரோகியா?

 
1 1

 மதுரை மாவட்டம் சோழவந்தானில் "அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்" சார்பில் நடக்கும் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க அக்கட்சியின் தலைவரும், பொதுச் செயலாளருமான டிடிவி தினகரன் வந்திருந்தார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், “அண்ணன் செங்கோட்டையன் 1972-ல் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் கட்சி ஆரம்பித்த நாளிலிருந்து, சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றியவர். அதிமுகவின் மூத்த நிர்வாகி செங்கோட்டையனை பசும்பொன்னில் சந்தித்தது அரசியல் ரீதியான நிகழ்ச்சி இல்லை. ஒவ்வொரு ஆண்டும் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பசும்பொன் வரும்போதெல்லாம், செங்கோட்டையனும் அம்மாவின் பாதுகாப்பிற்காக கட்சி சார்பாக வருவார். ஜெயலலிதாவின் அரசியல் சுற்றுப்பயணத்தின் பாதுகாப்பில் செங்கோட்டையன் முக்கிய பங்காற்றியவர்.

நாங்கள் மூவரும் பசும்பொன்னில் சந்தித்ததை அரசியல் நிகழ்வாக பார்க்கவில்லை. துரோகத்தை வீழ்த்துவதற்கு மூவரும் ஒன்றாக இணைந்திருக்கிறோம் என்றுதான் செங்கோட்டையன் சொன்னார். கங்காரு குட்டியை மடியில் கட்டிப்பிடித்தது இருப்பது போல, எடப்பாடி பழனிசாமி பதவியை கட்டிப்பிடித்துக் கொண்டிருக்கிறார். குரங்கு கையில் சிக்கிய பூமாலை போல, தற்போது அதிமுகவை அவர் சின்னாபின்னமாக்கி வருகிறார்.

திமுக மீண்டும் ஆட்சிக்கு வர எடப்பாடி பழனிச்சாமி வழி வகுக்கிறார். மற்றவர்களை பார்த்து 'துரோகி' என கூறும் தகுதிகூட எடப்பாடி பழனிசாமிக்கு இல்லை. தற்போது, தனக்குதானே கொள்ளிக்கட்டையை எடுத்து தலையில் சொரிந்து கொண்டது போல், அதிமுகவில் இருந்து செங்கோட்டையனை நீக்கியுள்ளார்.

எங்களை நேருக்கும் நேர் சந்திக்கும் தைரியம் எடப்பாடிக்கு கிடையாது. தன்னை முதலமைச்சர் ஆக்கிய சசிகலாவை கட்சியிலிருந்து நீக்கிய எடப்பாடி துரோகியா? அல்லது நாங்கள் துரோகியா? ஹிட்லர் போன்ற மனப்பான்மையில் உள்ள எடப்பாடி பழனிசாமிக்கு துரோகத்திற்கான ‘நோபல் பரிசு’ கொடுக்க வேண்டும்.

எங்களோடு சாதி மதத்திற்கு அப்பாற்பட்டு பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் குருபூஜைக்கு வந்த கொங்கு நாட்டு தங்கம் செங்கோட்டையனை கட்சியிலிருந்து நீக்கிய துரோகத்தின் உருவம் பழனிசாமிக்கு தென் தமிழக மக்கள் நிச்சயம் தேர்தலில் பதிலளிப்பார்கள். தென் தமிழகத்தில் மிகப்பெரிய தோல்வியை எடப்பாடி சந்திப்பார். எங்களை பி-டீன் என்று சொல்லும் எடப்பாடிதான், 2021-ல் திமுக ஆட்சிக்கு வர காரணமாக இருந்தார். ஆனால், இத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமியின் துரோகம் வீழ்த்தப்படும்.

கொடநாடு கொலை கொள்ளை வழக்கை பற்றி பேசினாலே, பழனிசாமி பதறுவார். அரக்கர்கள் கொஞ்சம் கொஞ்சமாக தங்களது அழிவை சந்திப்பார்கள். எடப்பாடிக்கு தேர்தலில் இதற்கான பதில் கிடைக்கும்" என்றார்.