வாடகை பாக்கியால் அமமுக ஆபிசை காலி செய்ய தினகரனுக்கு நெருக்கடியா?
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அமமுக தலைமை அலுவலகம் தொடர்பாக நீண்ட நாட்களாக நடந்த பஞ்சாயத்து தோல்வியில் முடிந்ததை தொடர்ந்து இடத்தை காலி செய்யும்படி உரிமையாளர் தரப்பு வலியுறுத்துவதாக செய்திகள் வெளியானது.
இந்நிலையில் சென்னை ராயப்பேட்டை அமமுக தலைமை அலுவலகத்தில் கட்சியின் துணைப்பொதுச்செயலாளர் செந்தமிழன் அமமுக தலைமை அலுவலக விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “அமமுக அலுவலகம் பற்றி நேற்று ஒரு பத்திரிக்கையில் ஒரு செய்தி வெளியானது. சம்பந்தப்பட்ட பத்திரிக்கை நிர்வாகம் பேசிய உடன் அவர்கள் மறுப்பு தெரிவித்து செய்தி வெளியிட்டு உள்ளனர். பொதுச்செயலாளர் பெயருக்கு களங்கம் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக இது போன்று ஒரு செயலை செய்து வருகிறார்கள். அது தொடர்பாக இன்று தெளிவுப்படுத்த உள்ளேன்.
அமமுக தலைமை அலுவலகம் அசோக் நகரில் இருந்து அலுவலகம் ராயப்பேட்டைக்கு மாற்றப்பட்டது. அமமுகவில் இருந்த பொன் முருகேசன் அவரின் விருப்பத்தின்பேரில், அழைப்பின் பேரில்தான் ராயப்பேடையில் தலைமை அலுவலகம் மாற்றப்பட்டது. இடத்தின் உரிமையாளர் பிரிஸ்ட் பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர்களின் நலன் கருதி அமமுக தலைமை அலுவலகம் பயன்படுத்திக் கொள்கின்றனர். 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை அமமுக பயன்படுத்திக் கொள்ள ஒப்பந்தம் உள்ளது. வாடகையோ, மின்சார பாக்கியோ இதுவரைக்கும் அப்படி இல்லை. அமமுக தலைமை அலுவலகம் குறித்தான இடப்பிரச்சினை விவகாரம் குறித்த தகவல் அடிப்படை ஆதாரமின்றி பரப்பப்பட்டுள்ளது. பத்திரிகைகளில் வெளியான தகவலை பரப்பியவர்கள் மீது தேவையேற்படின் அவதூறு வழக்கு தொடரவும் செய்வோம். நான் அதிமுகவில் மீண்டும் இணைவதாக தொடர்ந்து வதந்தி பரப்பப்படுகிறது” என தெரிவித்தார