பாஜக தமிழகத்தில் வெல்ல வாய்ப்பு உள்ளதா ? சுப்பிரமணியன் சுவாமி சொல்வதென்ன..?

 
1

தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக லோக்சபா தேர்தல் நடக்கிறது. வாக்குப்பதிவுக்கு இன்னும் ஒரு மாதம் மட்டுமே இருக்கும் நிலையில், பிரச்சாரம் தீவிரமாக நடந்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக அதிமுக கூட்டணியில் இருந்த பாஜக இந்த முறை தனியாகக் கூட்டணியை அமைத்துள்ளது. பாஜக 19 இடங்களில் போட்டியிடுகிறது.

இதற்கிடையே மதுரைக்கு வந்த பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி செய்தியாளர்களிடம் பேசினார். பாஜக தமிழகத்தில் எந்த தொகுதியில் வெல்ல வாய்ப்பு இருக்கிறது என்ற கேள்விக்கு அவர், “தமிழகத்தில் முழுமையாக யார் எங்கே போட்டியிடுகிறார்கள் என்பதை நான் பார்க்கவில்லை. நான் ஒரே ஒரு தொகுதி மட்டுமே ஆய்வு செய்தேன். நெல்லை தொகுதி.. அங்கே நயினார் நாகேந்திரன் களமிறங்குகிறார். அங்கே அவர் கட்டாயம் ஜெயிப்பார்” என்று பதிலளித்தார்.

தொடர்ந்து ஆளுநராக இருந்த தமிழிசையே தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு தென்சென்னை தொகுதியில் போட்டியிடுகிறார் இது குறித்து என்ன நினைக்கிறீர்கள் என்ற கேள்விக்கு, “அது என்னோட தலைவலி இல்லை” என்று அவர் சிரித்துக் கொண்டே பதிலளித்தார். வாய்ப்பு இருக்கு: முன்னதாக அவர் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய போது அவர் மேலும் பல கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார். அவர், “லோக்சபா தேர்தலில் நான் இந்த முறை போட்டியிடவில்லை. நான் ஏற்கனவே ஆறு முறை வெற்றி பெற்றுள்ளேன். அவசியம் இருந்தால் ராஜ்யசபா வாங்கிக் கொள்வேன்.

மேலும், தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இங்கே பாஜக வளர்ந்துள்ளது. யார் வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும்., பாஜக தமிழகத்தில் வெல்ல வாய்ப்புகள் இருக்கிறது” என்றார்.

மூன்றாவது முறையாக மோடி பிரதமராக வருவாரா என்ற கேள்விக்குத் துளியும் யோசிக்காமல், "அவர் வரக்கூடாது. அவரை தோற்கடிக்க வேண்டும்" என்று கூறினார்.தேசியளவில் பாஜகவுக்குத் தனிப் பெரும்பான்மை எளிதாகக் கிடைக்கலாம். ஆனால் மோடி வரக்கூடாது. ஏனென்றால் ஏற்கனவே மோடி இரண்டு முறை பிரதமராக இருந்துவிட்டார். எதைச் செய்ய வேண்டுமோ அதை அவர் செய்யவில்லை. சீனா நமது நாட்டில் புகுந்து 4000 சதுர கிமீ நிலத்தை எடுத்துள்ளனர். அதைத் தடுக்க எதுவும் செய்யவில்லை. பொருளாதாரத்தை மேம்படுத்தவும் அவர் எதையும் செய்யவில்லை.

விளம்பரத்தில் தான் அதைச் செய்துவிட்டோம் இதைச் செய்துவிட்டோம் என்கிறார்கள். ஆனால், உண்மையில் எதுவுமே இல்லை. மாலத்தீவு போன்ற சிறு நாடுகள் கூட நமது வீரர்களை வெளியே அனுப்பிவிட்டனர். அதைத் தடுக்க என்ன செய்தோம். எதுவும் செய்யவில்லை என்பதை உண்மை..