ஜல்லிக்கட்டில் முறைகேடு- மாடுபிடி வீரர் மதுரை ஆட்சியரிடம் புகார் மனு

 
அபிசித்தர்

உலகப் புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி நேற்று நடைபெற்றது.  10 சுற்றுக்களாக நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியின் ஒன்பதாவது சுற்று முடிவில் 710 காளைகள் அவிழ்த்து விடப்பட்டிருந்தன.   மதுரை கருப்பாயூரணி சேர்ந்த கார்த்திக் மற்றும் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த அபிசித்தர் ஆகியோர் தலா பதினோரு காளைகளை அடக்கி சமநிலையில் இருந்தனர்.

பின்னர் இருவரும் 17காளைகளை பிடித்த நிலையில் யார் முதலிடம் பிடிப்பார்கள் என்று கடும் எதிர்பார்ப்பு ஏற்பட்ட நிலையில் இறுதி சுற்றுக்கான கடைசி ஐந்து நிமிடத்தில் அவிழ்க்கப்பட்ட மூன்று  காளைகளில் ஒரு காளையை கார்த்திக் பிடித்தார்.  இறுதியில் 18 காளைகளை அடக்கிய கார்த்திக் முதலிடம் பிடித்ததாக அறிவிக்கப்பட்டது.  அபிசித்தர் 2ஆம் இடம் பிடித்ததாக அறிவிக்கப்பட்ட நிலையில் விதிமீறல் நடைபெற்றதாக  குற்றம் சாட்டி அவர், பரிசை வாங்க மறுத்து புறக்கணித்து சென்றார்.

இந்நிலையில் உலகப்புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் 2வது இடம்பிடித்த மாடுபிடி வீரரான சிவகங்கை மாவட்டம் பூவந்தி பகுதியை சேர்ந்த அபிசித்தர் மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதாவிடம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில் ஜல்லிக்கட்டு கமிட்டி ஒரு தலைபட்சமாக நடந்துகொண்டதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் விரைவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளதாகவும், வரும் 24 ஆம் தேதி மதுரை வரும் முதலமைச்சரிடம் கோரிக்கை மனு அளிக்கவுள்ளதாகவும் அபிசித்தர் பேட்டியளித்துள்ளார்.