கரூர் வழக்கை விசாரித்த ஐபிஎஸ் அதிகாரி தற்போது தமிழக உளவுத்துறை ஐ.ஜி-யாகப் பொறுப்பேற்பு..!

 
1

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசு அமைந்தபின் தொடர்ச்சியாக ஐபிஎஸ், ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர்.

அதன் தொடர்ச்சியாக, தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலின் போது இந்திய தேர்தல் ஆணையத்தால் தமிழ்நாடு உளவுத்துறை ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டிருந்த அவினாஷ் குமார், தற்போது மாற்றப்பட்டுள்ளார். தமிழ்நாடு காவல்துறையில் வடக்கு மண்டல காவல்துறை ஐ.ஜி.யாகப் பணியாற்றி வரும் அஸ்ரா கார்க்கை புதிய உளவுத்துறை ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் மணிவாசன் பிறப்பித்துள்ளார்.

யார் இந்த அஸ்ரா கார்க்?

அஸ்ரா கார்க் பல்வேறு கடுமையான குற்றவியல் மற்றும் சமூக பிரச்சினைகளுக்கு எதிராக தீவிர நடவடிக்கைகள் எடுத்து பல்வேறு பாராட்டுகளை பெற்றுள்ளார். குறிப்பாக கந்து வட்டி கொடுமைகள், சாதிய மோதல்கள், சமூகப் பிரச்சனை, கிட்னி கடத்தல், கட்டபஞ்சாயத்து, போதை பொருள் குற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு குற்றங்களுக்கு எதிராக தீவிர நடவடிக்கை எடுத்ததன் மூலம் பொதுமக்கள் மத்தியிலும் நன்மதிப்பை பெற்றுள்ளார்.

இவர் தென்மண்டல ஐ.ஜி.யாக பணியாற்றியபோது போதைப்பொருள் கடத்தல்களுக்கு எதிராக தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டு பல குற்றவாளிகளை கைது செய்து அவர்களது சொத்துக்களையும் முடக்கி நீதிமன்றத்தால் பாராட்டுகளையும் பெற்றுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பங்கேற்றிருந்த கரூர் பரப்புரையில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த வழக்கில் அஸ்ரா கார்க் தலைமையில் அப்போதைய திமுக அரசு சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைந்திருந்தது. பின்னர் இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.