“பெண் காவலரிடம் என் கணவர் நட்பாகவே பழகினார்; பாலியல் தொல்லை கொடுக்கவில்லை”- ஐபிஎஸ் அதிகாரி மனைவி

சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள ஐபிஎஸ் அதிகாரி மகேஷ்குமார் மீது பாலியல் புகார் அளித்த பெண் காவலர் மீது டிஜிபியிடம் மகேஷ்குமார் மனைவி புகார் அளித்துள்ளார்.
பாலியல் தொல்லை கொடுத்ததாக பெண் போக்குவரத்து காவலர் அளித்த புகாரின் பேரில் சென்னை போக்குவரத்து காவல் இணை ஆணையர் மகேஷ் குமார் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டார். பிறகு அவரை மாநில உள்துறை அமைச்சகம் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டது. இந்த விவகாரம் குறித்து ஐபிஎஸ் அதிகாரி மகேஷ் குமாரின் மனைவி அனுராதா நேற்று தாம்பரத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது, உள்நோக்கத்தோடு புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும் பணம் மற்றும் நகை வாங்குவதற்காக புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தார். இன்று தமிழ்நாடு காவல்துறை பிஜேபி அலுவலகத்திற்கு தனது வழக்கறிஞர் வந்து பெண் போக்குவரத்து காவலர் புகார் விவகாரம் குறித்து இந்த வாரம் தொடர்பாக டி.ஜி.பி அவர்களிடமும் இந்த விவகாரத்தை விசாரணை செய்யும் விசாக கமிட்டியிடமும் தங்களுடைய தரப்பு வாதத்தையும் கேட்க வேண்டும் எனவும் பெண் போக்குவரத்து காவலர் அளித்த புகாரில் உள்நோக்கம் உள்ளது எனவும் மனு அளித்துள்ளார்.
பிறகு டிஜிபி அலுவலகத்திலிருந்து வெளியே வந்த ஐபிஎஸ் அதிகாரி மகேஷ் குமார் மனைவி மற்றும் அவரது வழக்கறிஞர் உடன் செய்தியாளர்களை சந்தித்தபோது, “தமிழ்நாடு காவல்துறை இயக்குனர் சங்கர் ஜிவால் சாரை பார்த்து புகார் மனு கொடுத்து இருக்கோம், எங்களுக்கு நல்ல தீர்ப்பு கிடைக்கும் என நம்புகிறோம். பாதிக்கப்பட்டவர் பொய்யாக புகார் அளித்துள்ளார், எங்கள் மீது எந்த தவறும் இல்லை. இரண்டு பக்கமும் விசாரிக்க வேண்டும் என்பது எங்களுடைய கோரிக்கை. ஒரு தலை பட்சமாக நடவடிக்கை எடுக்க கூடாது நேற்று நள்ளிரவில் சம்மன் வழங்கி சஸ்பென்ட் செய்துள்ளனர். நம்முடைய தரப்பை கேட்கவில்லையா? என்கிற எண்ணம் தோன்றுகிறது. விசாகா கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது, அது நமக்கு சாதகமாக பாதகமாக இல்லாமல் நியாமன ஒன்று கிடைக்க வேண்டும். தங்களிடம் இருக்கும் ஆதாரங்களை விசாகா கமிட்டியில் விசாரணையில் கேட்கும்போது கொடுப்போம்.
ஒரு புகார் மட்டுமே வந்துள்ளது, ஒரு பெண் தான் புகார் அளித்துள்ளார், அதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. விசாகா கமிட்டி அமைத்து விசாரணை நடைபெற்று வருகிறது. ஒரு தலைபட்சமாக நடவடிக்கை என நேற்று கூறியது எங்கள் தரப்பை கேட்கவில்லை என்பது மட்டுமே வேறெதுவும் கிடையாது. ஏதேனும் ஒரு முகாந்திரம் இருக்கும் பட்சத்தில் நடவடிக்கை எடுத்து இருப்பார்கள், எந்த ஒரு ஆதாரமும் இன்றி காவல்துறை எப்பொழுதும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க மாட்டார்கள். எங்களுக்கான ஒரு நியாயம் இருக்கிறது, அதனை கேட்க வேண்டும் என்பது எங்களுடைய கோரிக்கை. எங்களுடைய குடும்பத்தை அசிங்கப்படுத்த வேண்டும் என்கிற நோக்கத்தோடு புகார் அளிக்கப்பட்டுள்ளது. எங்களிடம் இருந்து பணம் வாங்குவது நகை வாங்குவது என்பதுதான் புகார் கொடுத்துள்ள பெண் காவலரின் நோக்கம். தவறான உறவில் இருந்ததாக ஊடகங்கள் தயவுசெய்து செய்தியை வெளியிட வேண்டாம். நட்பு ரீதியாக பழகியதை தவறான உறவு என செய்தி வெளியிட வேண்டாம்” என கேட்டுக் கொண்டார்.