#IPL NEWS : பென் டக்கெட்டுக்கு 2 ஆண்டுகள் ஐபிஎல் தடை? - டெல்லி கேபிடல்ஸ் அணியில் இணைந்த புதிய வீரர்..!

 
1

டெல்லி கேபிடல்ஸ் (DC) அணியில் பென் டக்கெட்டுக்கு மாற்றாக இங்கிலாந்து அணியின் இளம் சுழற்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் ரெஹான் அகமது ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.இதற்கு முன்பு ஐபிஎல் போட்டிகளில் விளையாடியிராத ரேஹான், 75 லட்சம் ரூபாய்க்கு கேப்பிட்டல்ஸ் அணியில் இணைகிறார்.

 

ஐபிஎல் தொடரின் 19ஆவது சீசன் கடந்த மார்ச் 28ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் அக்ஸர் படேல் தலைமையில் களமிறங்கி இருக்கும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியானது இந்த சீசனை சிறப்பாக தொடங்கியுள்ளது. அந்த அணி இதுவரை விளையாடிய 6 போட்டிகளில் தலா 3 வெற்றி, 3 தோல்விகளை சந்தித்து புள்ளிப்பட்டியலில் 5ஆம் இடத்தை பிடித்துள்ளது. இதையடுத்து அந்த அணி தங்களுடைய அடுத்த லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்கொள்ளவுள்ளது.

இந்நிலையில் இப்போட்டிக்கு முன்னதாக அந்த அணி மாற்று வீரர் ஒருவரை ஒப்பந்தம் செய்துள்ளது. அதன்படி, நடப்பு ஐபிஎல் தொடரின் வீரர்கள் ஏலத்தின் போது இங்கிலாந்து தொடக்க வீரர் பென் டக்கெட்டை ரூ.2 கோடி என்ற அடிப்படை தொகையில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி ஒப்பந்தம் செய்திருந்தது. ஆனால் அவர், தனது சர்வதேச கிரிக்கெட்டில் கனம் செலுத்த விரும்புவதாக கூறி, ஐபில் தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

இதன் காரணமாக பென் டக்கெட்டிற்கு ஐபிஎல் தொடரில் பங்கேற்க தடையும் விதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. ஏனெனில், ஐபிஎல் விதிகளின்படி, ஏலத்தில் எடுக்கப்பட்ட பிறகு வீரர்கள் சரியான காரணமின்றி தொடரில் இருந்து விலகினால், அவர்களுக்கு அடுத்த இரண்டு ஐபிஎல் சீசன்களில் விளையாட தடை விதிக்கப்படும். அதன்படி பார்த்தால் 2027 மற்றும் 2028ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரிலும் பென் டக்கெட்டால் பங்கேற்க முடியாத சூழல் உருவாகியுள்ளது.

இந்நிலையில், தொடரில் இருந்து விலகிய பென் டக்கெட்டிற்கான மாற்ற வீரராக இங்கிலாந்து பவுலிங் ஆல் ரவுண்டர் ரெஹான் அஹ்மதை டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி ஒப்பந்தம் செய்துள்ளது. அந்தவகையில், ரூ.75 லட்சம் என்ற அடிப்படை தொகையில் அவர் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதனை ஐபிஎல் நிர்வாகமும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.