தூத்துக்குடியில் இன்று முதலீட்டாளர்கள் மாநாடு.. மின்சார கார் விற்பனையை தொடங்கி வைக்கும் முதல்வர் ஸ்டாலின்..!!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், 41 தொழில் நிறுவனங்களுடன் ரூ.32,500 கோடிக்கு இன்று புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன.
தூத்துக்குடியில் இன்று தமிழ்நாடு அரசு சார்பில் முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற இருக்கிறது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் 41 தொழில் நிறுவனங்களுடன் ரூ.32,554 கோடிக்கு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன. இந்த தொழில் முதலீடுகள் மூலமாக 50,000 பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும் எனக் கூறப்படுகிறது.
முன்னதாக தூத்துக்குடியில் உற்பத்தியை தொடங்கியுள்ள வின்ஃபாஸ்ட் நிறுவனத்தின் முதல் மின்சார கார் விற்பனையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். வியட்நாமை சேர்ந்த வின் ஃபாஸ்ட் நிறுவனம் 16,000 கோடி ரூபாய் செலவில் தூத்துக்குடியில் உள்ள சிப்காட் தொழிற்பூங்காவில் 408 ஏக்கர் பரப்பளவில் மின்சார கார் உற்பத்தி தொழிற்சாலையை கடந்த 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 25ஆம் தேதி அடிக்கல் நாட்டி கட்டுமான பணியை தொடங்கியது.

தொழிற்சாலை பணிகள் நிறைவுபெற்ற நிலையில், முதல் மின்சார கார் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த தொழிற்சாலையில் வி.எ. 7 மற்றும் வி.எஃப். 6 ஆகிய இரண்டு வகை கார்களின் தயாரிக்கப்படுகிறது. இவற்றுக்கான முன்பதிவு கடந்த மாதமே தொடங்கிவிட்டது. தொழிற்சாலையின் மூலம் நான் முதல்வன் திட்டத்தில் பயிற்சி பெற்ற 200 பேர் உட்பட 3500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க உள்ளது. இந்நிலையில் முதல் மின்சார கார் விற்பனையை இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைக்க உள்ளார். இதனை ஒட்டி தூத்துக்குடியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வரவேற்க பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.


