ஸ்ரீதேவி வாங்கிய சொத்தை உரிமை கொண்டாடி மூவர் தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை
மறைந்த நடிகை ஸ்ரீதேவி வாங்கியிருந்த சொத்து விவகாரம் தொடர்பாக செங்கல்பட்டு நீதிமன்றத்தில் நடைபெறும் உரிமையியல் வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மறைந்த நடிகை ஸ்ரீதேவி, 1988 ஆம் ஆண்டு சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள 4.77 ஏக்கர் நிலத்தை, சம்பந்த முதலியார் என்பவரின் குடும்பத்தினரிடம் இருந்து வாங்கியுள்ளார். கடந்த 37 ஆண்டுகளாக சொத்தை அனுபவித்து வரும் நிலையில், சம்பந்த முதலியாரின் மகன் சந்திரசேகரன் முதலியாரின் இரண்டாவது மனைவி மகன் நடராஜன் மற்றும் மகள் சிவகாமி என மூன்று பேர் வாரிசு சான்றிதழ் பெற்று, சொத்தில் தங்களுக்கு பங்கு உள்ளது என கூறி செங்கல்பட்டு கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கை நிராகரிக்கக் கோரி மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் அவரது மகள்கள் மற்றும் நடிகைகளான ஜான்வி கபூர், குஷி கபூர் ஆகியோர் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனுக்களை விசாரித்த செங்கல்பட்டு நீதிமன்றம், முழுமையான விசாரணை பின்பே, சொத்தின் உரிமை குறித்து முடிவெடுக்க முடியும் என்று கூறி, போனி கபூர் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து போனி கபூர் மற்றும் ஜான்வி கபூர், குஷி கபூர் கூட்டாக சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். அந்த மனுவில், சம்பந்த முதலியாரின் மகன் சந்திரசேகரன் முதலியாரின் இரண்டாவது மனைவி மகன் நடராஜன் மற்றும் மகள் சிவகாமி என மூன்று பேர் வாரிசு சான்றிதழ் பெற்று போலியான ஆவணங்களை தாக்கல் செய்து வழக்கு தொடர்ந்து உள்ளதாகவும், சொத்தின் உரிமையாளர் மயிலாப்பூரில் வசித்து வந்த நிலையில், அவரது வாரிசுகள் எனக் கூறி மூன்று பேரும் தாம்பரம் தாசில்தார் அலுவலகத்தில் 2005 ஆம் ஆண்டு வாரிசு சான்றிதழ் பெற்றுள்ளனர். முதல் மனைவி உயிரோடு இருந்த போது சந்திரசேகரன் தன்னை திருமணம் செய்து கொண்டதாக இரண்டாவது மனைவி கூறியுள்ளார். இதனால் மூவரையும் சட்டபூர்வ வாரிசுகளாக கூற முடியாது என மனுவில் சுட்டிக்காட்டியுள்ளனர். தங்களுடைய மனுவை செங்கல்பட்டு நீதிமன்றம் நிராகரித்தது தவறு எனவும் சுட்டிக்காட்டி இருந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி டி.வி.தமிழ்செல்வி, இறுதி விசாரணைக்காக, வழக்கை மார்ச் 26ம் தேதி தள்ளி வைத்துள்ளார். அதுவரை செங்கல்பட்டு நீதிமன்ற விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.

