அங்கீகரிக்கப்பட்ட செய்தியாளர்களின் குடும்பங்களுக்கு மருத்துவ காப்பீட்டுத் திட்டம்!!

 
stalin

அங்கீகரிக்கப்பட்ட செய்தியாளர்கள் மற்றும் பருவ இதழ் செய்தியாளர்களின் குடும்பங்களை முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பயனாளிகளாக இணைத்து, காப்பீட்டு அடையாள அட்டைகளை முதல்வர் ஸ்டாலின் இன்று வழங்கினார்.

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை எம்ஆர்சி நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தை வருகிற 11-ஆம் தேதி முதல் 5 ஆண்டுகளுக்கு நீட்டித்து பொதுத்துறை நிறுவனமான யுனைடெட் இந்தியா காப்பீட்டு நிறுவனத்திற்கு அதற்கான ஆணையை வழங்கினார்.  அத்துடன் முதலமைச்சர் முன்னிலையில் தமிழ்நாடு அரசுக்கும் யுனைடெட் இந்தியா காப்பீட்டு நிறுவனத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் பரிமாற்றம் மேற்கொள்ளப்பட்டது. இத்திட்டத்திற்காக ரூபாய் 1248.9 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

stalin

இத்திட்டத்தின் மூலம் 11 தொடர் சிகிச்சை முறைகள் 62 முழுமையான பரிசோதனை முறைகள் மற்றும் 8 உயர் சிறப்பு சிகிச்சை முறைகள் உள்ளிட்ட ஆயிரத்து 90 மருத்துவ மற்றும் அறுவை சிகிச்சை முறைகளை கட்டணமின்றி,  அங்கீகரிக்கப்பட்ட 714 அரசு மருத்துவமனைகள் மற்றும் 886 தனியார் மருத்துவமனைகள் என மொத்தம் 1600 மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று பயன்பெறலாம் என்பதுடன்  கூடுதல் சிகிச்சை முறைகள் தற்போது செயல்படுத்தப்படும் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.  இத்திட்டத்தின் வாயிலாக 1.37 கோடி குடும்பங்கள் ஆண்டு ஒன்றுக்கு 5 லட்சம் ரூபாய் வரையும் மருத்துவ காப்பீட்டு வசதி பெற முடியும்.

govt

செய்தித் துறையில் அங்கீகரிக்கப்பட்ட செய்தியாளர்கள் மற்றும் பருவ இதழ் செய்தியாளர்களின் குடும்பங்களை ஆண்டு வருமான உச்ச வரம்பின்றி முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் பயனாளிகளாக இணைக்கவும், இனி வரும் ஒவ்வொரு ஆண்டும் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை இடமிருந்து அங்கீகரிக்கப்பட்ட செய்தியாளர்களின் பட்டியல்களை பெற்று முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தில் சேர்க்கவும் அரசாணை வெளியிடப்பட்டது.  தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை யினால் 2020 - 21 ஆம் ஆண்டில் புதுப்பிக்கப்பட்ட செய்தியாளர் அடையாள அட்டை உடைய 1,414 செய்தியாளர்களின் குடும்பங்கள் முதல் கட்டமாக அரசாணையின்படி இத்திட்டத்தில் பயனாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர்.