கீழக்கரை ஜல்லிக்கட்டு போட்டிக்கு முன்பதிவு செய்ய அறிவுறுத்தல்

 
ஜல்லிக்கட்டு கலையரங்கம்

மதுரையில் புதிதாக கட்டப்பட்டுள்ள கீழக்கரை ஜல்லிக்கட்டு அரங்கத்தில் நடைபெறும் போட்டியில் பங்கேற்க நாளையும், நாளை மறுநாளும் முன்பதிவு செய்யலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள குட்டிமேய்க்கிபட்டி ஊராட்சிக்குட்பட்ட கீழக்கரை கிராமத்தில்  66 ஏக்கர் பரப்பளவில் சுமார் 67கோடி ரூபாய் மதிப்பீட்டில் உலகத்தரத்திலான பிராமண்ட ஜல்லிக்கட்டு கலையரங்கம் கட்டப்பட்டு கலையரங்கப் பணிகள் முடிவடைந்து திறப்பு விழாவுக்காக காத்திருக்கிறது. ஜல்லிகட்டு கலையரங்கம் தமிழக முதல்வரால் இம்மாதம் 24 ஆம் தேதி திறக்கப்பட உள்ளது. இந்த ஜல்லிகட்டு கலையரங்கத்திற்கு கலைஞர் நூற்றாண்டு ஜல்லிக்கட்டு கலையரங்கம் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. திறப்புவிழாவையொட்டி சிறப்பு ஜல்லிக்கட்டு போட்டியும் அரங்கேற உள்ளது.

இந்நிலையில் மதுரையில் ஜல்லிகட்டு கலையரங்கத்தில் நடைபெறும் போட்டியில் பங்கேற்க மாடுபிடி வீரர்களும், காளைகளின் உரிமையாளர்களும் நாளை பிற்பகல் 12 மணி முதல் நாளை மறுநாள் பிற்பகல் 12 மணி வரை முன்பதிவு செய்யலாம். உடற்தகுதிச் சான்றுடன் மாடுபிடி வீரர்களும், காளைகளின் மருத்துவச் சான்றுடன் அதன் உரிமையாளகள் madurai.nic.in என்ற இணையதளம் மூலம் முன்பதிவு செய்து கொள்ள மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.