இன்ஸ்டாவால் வந்த வினை..!! கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரம்: புதுமாப்பிள்ளை கைது..!!

 
Q

ஓமலூர் காடையாம்பட்டி ராஜமன்னார் கால னியை சேர்ந்தவர் செந்தில்குமார். இவருடைய மகன் பிரதீப் (வயது 20). கூலித்தொழிலாளி. இன்ஸ்டாகிராம் சமூகவலைதளம் மூலமாக ஈரோடு மாவட்டம் பெருந்துறையை சேர்ந்த 17 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டது. அவர்கள் 2 பேரும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். சிறுமி தற்போது கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.

இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் மாணவியை பிரதீப் ஈரோட்டுக்கு வர சொல்லி நேரில் சந்தித்து உள்ளார். பின்னர் வ.உ.சி. பூங்காவுக்கு அவர்கள் சென்றனர். அங்கு அவர்கள் மகிழ்ச்சியாக பேசிக்கொண்டு இருந்தனர். அப்போது திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறிய பிரதீப். அந்த மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து உள்ளார். இதையடுத்து மாணவியிடம் பிரதீப் பழகுவதை தவிர்த்து வந்தார்.

இந்த நிலையில், காதலனைப் பார்ப்பதற்காக மாணவி திடீரென பிரதீப்பின் வீட்டிற்கு சென்றார். அங்கு சென்ற மாணவிக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. பிரதீப்புக்கு ஏற்கனவே அதே பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் கடந்த மாதம் திருமணம் நடந்து முடிந்தது மாணவிக்கு தெரியவந்தது. தன்னை உருகி உருகி காதலித்துவிட்டு, தனக்கு தெரியாமல் வேறொரு பெண்ணை பிரதீப் திருமணம் செய்து ஏமாற்றியதை அறிந்து அந்த மாணவி நிலைகுலைந்து போனார்.

இதனால் பெரும் ஏமாற்றமும், மனவேதனையும் அடைந்த மாணவி, நேராக ஈரோடு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்குச் சென்று பிரதீப் மீது பரபரப்பு புகார் அளித்தார். புகாரின் பேரில், மகளிர் போலீசார் உடனடியாக வழக்குப் பதிவு செய்தனர். மைனர் சிறுமியை காதலித்து ஏமாற்றிய குற்றத்திற்காக, வாலிபர் பிரதீப் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதியப்பட்டது. இதையடுத்து, பிரதீப்பை போலீசார் நேற்று அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்தனர்.