இன்ஸ்டா இன்ஃப்ளூவன்சரால் வந்த வினை.. உஷார் மக்களே..!!
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ளூர் மொழியில் காமெடி வீடியோக்களைப் பதிவேற்றி வரும் 'பாலாஜி இருக்காரா' இன்ஸ்டா பக்கம், 1.14 லட்சம் ஃபாலோவர்களைப் பெற்றுள்ளது.
இந்தப் பக்கத்தின் உரிமையாளரான பாலாஜியை, கடந்த ஆகஸ்ட் மாதம் ஒரு நபர் தொடர்பு கொண்டு, "பாண்டியன் கிராக்கர்ஸ்" பட்டாசு கடையின் தீபாவளி விளம்பரத்திற்காக ப்ரமோஷன் வீடியோ செய்யச் சொன்னார். ₹35,000-க்கு ஒப்பந்தம் ஆகி, கூகுள் பே மூலம் பணம் அனுப்பப்பட்டது.
மேலும், சிவகாசி அனுப்பன்குளம் பகுதியிலிருந்து மேட்டூர் சர்வீஸ் பார்சல் மூலம் பட்டாசுகள் அனுப்பப்பட்டன.பாலாஜி, அவரது நண்பர்கள் கோவிந்தராஜ், பூமணி, முத்து, நந்தகுமார், ரோஷன் ஆகியோர் சேர்ந்து அந்தப் பட்டாசுகளைப் பயன்படுத்தி விளம்பர வீடியோவை எடுத்து, இன்ஸ்டா பக்கத்தில் பதிவேற்றினர்.
வீடியோவில் ஆன்லைன் ஆர்டர் செய்யும் வெப்சைட் லிங்க், ஸ்கேனிங் கியூஆர் கோட், மூன்று செல்போன் எண்கள் உள்ளிட்ட விவரங்கள் இடம்பெற்றிருந்தன. "ஹலோ அண்ணா, சிவகாசி பாண்டியன் கிராக்கர்ஸா. ஒரு பாக்ஸ் நிறைய பட்டாசு.. உடனே அனுப்புங்க அண்ணா.," என்று விளம்பரத்தில் கூறப்பட்டது.
இந்த வீடியோ 1 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வைகளைப் பெற்றது.இதன் விளைவாக, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல இடங்களில் இருந்து ₹3,000 முதல் ₹50,000 வரை பலர் ஆன்லைனில் பட்டாசுகளைப் புக் செய்தனர். விளம்பரத்தை நம்பி பாலாஜியே ₹30,000 செலுத்தி ஆர்டர் செய்தார். ஆனால், கடந்த 14-ஆம் தேதி ஃபாலோவர்கள் தொடர்பு கொண்டு, "வெப்சைட் ஓபன் ஆகவில்லை, செல்போன்கள் ஸ்விட்ச் ஆஃப்," என்று கூறியதும் அதிர்ச்சியடைந்த பாலாஜி சரிபார்த்தபோது, அனைத்து விவரங்களும் (வெப்சைட், எண்கள், இன்ஸ்டா பக்கம்) மறைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, பாலாஜி, கோவிந்தராஜ் ஆகியோர் கிருஷ்ணகிரி எஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்தனர். புகாரில் பாலாஜி கூறியது: "என்னோட பேரு பாலாஜி. நான் இன்ஸ்டாகிராம் 'பாலாஜி இருக்காரா' பேஜ் டெவலப் பண்ணிட்டு வரேன். அதுல காமெடி ரீல்ஸ் போட்டுட்டு இருந்தேன். திடீர்னு இன்ஸ்டா மெசேஜ் பண்ணி பாண்டியன் கிராக்கர்ஸ் மேனேஜர் பேசுறேன். வெப்சைட், யூடியூப் எல்லாம் கரெக்டா இருந்தது.
₹30,000 போட்டோம், ஃபாலோவர்ஸ் எல்லாரும் ஏமாந்துட்டாங்க. எஸ்பி ஆபீஸ்ல பெட்டிஷன் கொடுத்திருக்கோம்.
"போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் விவரங்கள் வெளியானன. தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் மாவட்ட வாரியாக அதிக ஃபாலோவர்கள் உள்ள இன்ஸ்டா பக்கங்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு ஃபாலோவர்கள் எண்ணிக்கைக்கேற்ப பணம் கொடுத்து விளம்பரம் செய்யச் சொன்ன கும்பல் இதன் பின்னணியில் இருந்தது.
பெங்களூரு 'அம்மாவா ட்ரோல்', வேலூர் 'பன்னீர் செல்வம்', 'வேலூர் 2.0' போன்ற பக்கங்கள் உட்பட தமிழகத்தின் பல மாவட்டங்கள், ஆந்திரா-கர்நாடகாவிலும் இது பரவியது. முதற்கட்டமாக ₹15 கோடி வரை இழப்பு ஏற்பட்டிருப்பதாகத் தெரியவந்துள்ளது.


